தமிழகத்தில் 4474 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள், விவசாயிகளுக்கு சிறு தவணைக் கடன்கள், நடுத்தர தவணைக் கடன்கள், பயிர்க் கடன்கள், சொத்துக்கள் மற்றும் நகைகள் மீதான கடன்கள் எனப் பல கடன் வசதிகளை அளிக்கின்றன. இந்தக் கடன் சங்கங்களில் 5 பவுன் வரை விவசாயிகள் வாங்கி இருந்த நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
அதையொட்டி, தகுதியுள்ள பயனாளிகளை அடையாளம் கண்டறிய, அனைத்து கடன் சங்கங்களிலும் நகைக் கடன்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான், தமிழகம் முழுவதும் உள்ள கடன் சங்கங்களில் மொத்தம், 2373 கோடியே 32 லட்சம் ரூபாய் வரை பயிர்க் கடன் தவறான முறையில் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நகைக் கடன், பல வகைகளில் மோசடியாக வழங்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. என்னென்ன வகைகளில் நகைக் கடன் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது?
1.ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக் கணக்கில் பல நகைக்கடன்களை பெறுவது
2.ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர், பல கூட்டுறவுச் சங்கங்களில், பல நகைக் கடன்கள் மூலம் பல லட்சம் ரூபாய் கடன் பெறுவது
3.வறியோருக்கு வழங்கப்படும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி லட்சக் கணக்கில் நகைக் கடன்கள் பெறுவது
4.போலி நகைகளை அடமானமாக வைத்து நகைக் கடன்களை பெறுவது
5.நகைகளை அடமானம் வைத்துள்ளதாக ஏமாற்றி நகைக் கடன்கள் கொடுப்பது
6.ஏற்கனவே இயற்றப்பட்ட சங்கத்தின் தீர்மானத்தில் திருத்தங்கள் அல்லது இடைச்செருகல் மூலம் சில உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்த்து நகைக் கடன்கள் வழங்குவது
7.வாடிக்கையாளர்களின் கணக்குகளில் நகைக் கடன் வழங்கப்பட்டதாகக் கணக்கு காண்பித்து, வேறொருவருக்கு கடன் தொகை வழங்குவது
8. தரமற்ற நகைகளுக்கு அவற்றின் தரத்தை விட அதிகளவில் கடன் தொகை வழங்குவது
9. நகைகளே இல்லாமல் நகைக் கடன் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பிப்பது
10. போலி நகைகளுக்கு நகைக் கடன் வழங்குவது
என ரகம் ரகமாக, இந்த நகைக் கடன் மோசடிகள் கடந்த 10 ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த நகைக் கடன் மூலம் பெற்றுக் கொண்ட கடன் தொகையை, வெளியில், மீட்டர் வட்டி, ரன் வட்டி, தண்டல் வட்டி என பல்வேறு கந்துவட்டிகளில் 24 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை கடனுக்கு விட்டு வட்டி வசூலித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது
அதேபோல், அடகு நகைகளுக்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள், அந்த நகைகளுக்கு வெளியில் 24 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை அதிக வட்டி வசூலித்து விட்டு, அதே நகைகளை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைந்த அளவு வட்டிக்கு அடகு வைத்து கடன் தொகை பெற்று, அந்தத் தொகையை பல மடங்கு வட்டிக்கு வெளியில் விட்டு 3 முறை லாபம் பார்த்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பலே மோசடி, செங்கல்பட்டு, திருவாரூர், சிவகங்கை, திருப்பத்துார், நாமக்கல், தருமபுரி, மதுரை, கன்னியாகுமரி என பல மாவட்டங்களில் நடந்துள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகைக் கடன் மோசடி அம்பலமானதை அடுத்து, கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள் முழுவதையும் கணினி மயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் நிர்வாக ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் பெரும் மாற்றங்களையும் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold loan, News On Instagram