நேபாளத்தைச் சேர்ந்த ஷபிலால் (55) என்பவர் சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் வாட்ச் மேனாக பணிப்புரிந்து வருகிறார். இவர் அதே குடியிருப்பில் கடந்த 13 ஆண்டுகளாக தரைதளத்தில் சிறிய அறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கோபிலாவுக்கு சிறு நீரகக் கோளாறு இருந்து வந்ததால் ஆப்ரேஷனுக்காக சிறுகச் சிறுக 5 லட்சம் ரூபாய் வரை சேர்த்து பையில் வைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி மருத்துவச் செலவுக்காக பணப்பையைத் தேடும்பொழுது அது இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது பையில் வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணமும் இரண்டரை சவரன் நகையும் திருடப்பட்டுள்ளதாக ஷபிலால் திருமங்கலம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மனைவியின் சிகிச்சைக்காக சிறுகச் சிறுக சேமித்து வைத்த பணம் போனதால் கதறி அழுத அவரின் நிலையைக் கண்ட போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, அரைக்கால் டவுசர் அணிந்து வாலிபர் ஒருவர் வீட்டை நோட்டமிட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று கையில் பையுடன் வருவது பதிவாகியிருந்தது. மேலும் சிசிடிவி காட்சியில் பதிவான அந்த நபர் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் குமார் (20) என்பது தெரியவந்தது.
Also read: ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி: தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம் - நோயாளிகள் அவதி
இதையடுத்து, விக்கி வீட்டில் இல்லாததை அறிந்த போலீசார் மொபைல் எண்ணை ஆய்வு செய்தபோது, அவர் தனது கூட்டாளிகளுடன் பாண்டிசேரியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் அவரைக் கைது செய்தனர். விசாரணையில், கடந்த 6 மாதங்களாக திருமங்கலம், அண்ணா நகர், திரு.வி.க நகர், திருமுல்லைவாயில், வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் திறந்திருக்கும் வீடுகளை நோட்டமிட்டு செல்போன், பணம், நகைகளைக் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
இதேபோல, செல்போன் திருடச் சென்ற இடத்தில் 5 இலட்சம் பணம் கொள்ளை அடித்ததாகவும், கொள்ளையடித்த பணம், நகைகளை விற்று நண்பர்களுடன் சேர்ந்து பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளதாகவும் விக்கி ஒப்புக்கொண்டார். இவர் மீது சென்னையில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. விக்கியிடமிருந்து 4.70 லட்சம் ரொக்கத்தையும், தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மனைவியின் சிகிச்சைக்காக வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் மீட்டு மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியைக் கைதுசெய்து பணத்தை மீட்டுக்கொடுத்த திருமங்கலம் காவல்துறையினரை உயரதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்