Home /News /tamil-nadu /

கோகுல்ராஜ் படுகொலை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்தது ஆறுதல் அளிக்கிறது - திருமாவளவன்

கோகுல்ராஜ் படுகொலை வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைத்தது ஆறுதல் அளிக்கிறது - திருமாவளவன்

தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

கோகுல்ராஜ் படுகொலையை ஆணவக்கொலை என்று வகைப்படுத்துவதைவிடவும் இதனை பயங்கரவாதக் குற்றம் என்றே கருதவேண்டும்.

  கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என நம்புகிறோம். அத்துடன், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் 2015ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் என்னும் ஊருக்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

  தலித் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்தாரெனக் கருதி, சங்ககிரியைச் சார்ந்த யுவராஜ் என்பவர் உள்பட சிலர் அவரைத் திட்டமிட்டு ஆணவக்கொலை செய்தனர் என்பது பின்னர் தெரியவந்தது. எனவே, குற்றவாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பிற சனநாயக சக்திகளின் சார்பில் கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், தமிழ்நாடு காவல்துறையின் விசாரணைக்கு மாறாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரி தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தின் மூலம் அவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

  Also read... உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்ளலாமா? கி.வீரமணி கேள்வி

  கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளில் இருவர் இறந்துபோன நிலையில், மற்ற 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. அவர்களில் 11 பேர் குற்றவாளிகள் என இன்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரங்களை மார்ச் 08 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. கோகுல்ராஜ் படுகொலையை ஆணவக்கொலை என்று வகைப்படுத்துவதைவிடவும் இதனை பயங்கரவாதக் குற்றம் என்றே கருதவேண்டும்.

  "பொதுமக்களுக்கு எதிராக ஒரு அரசியல் நோக்கத்துக்காகவோ அல்லது மதம் சார்ந்த நோக்கத்துக்காகவோ அல்லது ஒரு கருத்தியலின் அடிப்படையிலோ திட்டமிட்ட முறையில் வன்முறையைப் பயன்படுத்தி கொலை செய்வது அல்லது அச்சத்தை ஏற்படுத்துவது அல்லது பிளவினை உண்டாக்குவது அல்லது பொது அமைதிக்குக் கேடு செய்வது - அதுதான் பயங்கரவாத நடவடிக்கை " என இந்திய அரசு பயங்கரவாதத்துக்கு விளக்கம் அளித்துள்ளது. கோகுல்ராஜ் படுகொலையை சாதிப் பயங்கரவாதம் என்றே வகைப்படுத்தவேண்டும்.

  எனவே, பயங்கரவாதக் குற்றம் என்னும் அடிப்படையில், குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் படி அதிகப்பட்சத் தண்டனைகள் வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படுமென தமிழகம் எதிர்பார்க்கிறது.

  ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.” ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றைப் பாராளுமன்றம் இயற்றவேண்டும்” என அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

  தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளவாறு ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றுமாறும் அதுவரை உச்சநீதிமன்றம் கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துமாறும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

  இந்த வழக்கில் சிறப்பாக வாதாடி நீதியை நிலைநாட்டிய வழக்கறிஞர் ப.ப.மோகன் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Thol. Thirumavalavan, VCK

  அடுத்த செய்தி