தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் 8ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தலைமறைவாக இருந்தார்.
இவ்வழக்கினை கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நாமக்கல் நீதிமன்றத்திலிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி சம்பத்குமாா் இன்று தீர்ப்பளித்தார்.
அப்போது யுவராஜ் உள்ளிட்ட 15பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்,
அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10பேர் குற்றவாளியாகவும், சங்கர் , அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை , சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். குற்றவாளிகள் 10பேருக்குமான தண்டனை விபரம் வரும் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தபோது வழக்கில் தொடர்புடைய ஜோதிமணி என்ற பெண் உயிரிழந்த நிலையில், தலைமறைவாக இருந்த அமுதரசு என்பவரின் மீதான வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து அரசு வழக்கறிஞர் மோகன் பேசுகையில் :
இந்த வழக்கில் அரசு தரப்பில் 106 சாட்சியம் மற்றும் நீதிமன்ற தரப்பில் இரு சாட்சியங்கள் என 108 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்துள்ள நிலையில் அதில் சிசிடிவி உட்பட 100க்கும் மேற்பட்ட ஆவண பொருட்கள் சமர்பிக்கப்பட்டது. பிறழ்சாட்சியம் அளிக்கப்பட்ட இந்த வழக்கில் 10பேர் குற்றவாளியாக கண்டறியும் வகையில் வாதாடியுள்ளோம் என்றார்.
10பேரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்புக்காக உயிரோடு காத்திருந்தேன், 10பேருக்கும் தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன என கோகுல்ராஜின் தாயார் சித்ரா கண்ணீர் மல்க கூறினார் .
செய்தியாளர்: கருணாகரன் - உயர் நீதிமன்ற மதுரை கிளை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.