கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜூக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜூக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு
கோகுல்ராஜ் ஆணவக் கொலை
கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் கடந்த 5ம் தேதி அறிவித்திருந்தது.
கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜூக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வழக்கின் விபரம்:
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர்.
நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த வழக்கு விசாரணை, கோகுல்ராஜ் தாய் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
இறுதிகட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 5ம் தேதி காலை 11 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வெளியானது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்,
அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதிஸ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். அதேவேளையில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், யுவராஜ் மற்றும் அவரது கார் ஒட்டுநர் அருண் இருவருக்கும் 3 ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் மற்ற குற்றவாளிகளான குமார், சதிஸ்குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் 2ஆயுள் தண்டனையும், சந்திரசேகரன் ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு மற்றும் கிரிதர் ஆகியோர்கு 5வருட கடுங்காவல் தண்டனை மற்றும் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.