அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டுமானால், மதுக்கடைகளை மூட வேண்டும். இதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தையில் குறைந்தாலும், இந்தியாவில் மட்டுமே உயர்த்தி வருகின்றனர். 50 ரூபாய்க்கு மேலாக வரியாக செல்கிறது. கொரோனாவில் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மற்ற எல்லா பொருட்களும் விலை உயர்ந்து பொதுமக்களை அதிகமாக பாதித்து வருகிறது.
மாநில அரசும் தன் பங்கிற்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இதனால், குறைந்த வருவாய் உள்ள வாடகை வீட்டில் வசிப்பவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வாடகை உயர்த்தப்படும் நிலை இருப்பதால் சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி கடன் இருக்கும் நிலையில், வளர்ச்சித் திட்டங்கள் ஏதும் இல்லை. மதுவால் கிடைக்கும் 65 ஆயிரம் கோடி ரூபாயை கொண்டுதான் அரசு செயல்பட்டு வருகிறது. மதுவால் வருமானம் கிடைத்தாலும், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டுமானால், மதுக்கடைகளை மூட வேண்டும். இதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கு மது அருந்த தொடங்கி விட்டனர். கஞ்சா போன்ற போதை பொருட்கள் எளிதில் கிடைப்பதால் போதைக்கு மாணவர்கள் அடிமையாகி வருகிறார்கள். இதுதொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளேன். தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஏதும் இல்லாத நிலை உள்ளது. பீகார் போன்ற வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு வேலைசெய்து வருகின்றனர்.
எது ஒரிஜினல் தமிழணங்கு? இணையத்தில் மோதிக்கொள்ளும் திமுக - பாஜக!
சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தனியாருக்கு விற்பதற்கு முயற்சி நடக்கிறது. சேலம் உருக்காலை அமைவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிக குறைந்த விலைக்கு தங்களுடைய நிலத்தை கொடுத்தனர். சேலம் உருக்காலையை தனியாருக்கு கொடுப்பதாக இருந்தால், அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.