• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'புவி வெப்பமயமாதலின் ஆபத்தை உலக நாடுகள் உணரவில்லை' : அச்சம் தெரிவிக்கும் அன்புமணி

'புவி வெப்பமயமாதலின் ஆபத்தை உலக நாடுகள் உணரவில்லை' : அச்சம் தெரிவிக்கும் அன்புமணி

இந்திய மக்கள் அனைவரும் ஆடம்பரத் தேவைகளைத் தவிர்த்து விட்டு, இயற்கையுடன் இணைந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

  • Share this:
    ''புவிவெப்பமயமாதல் கட்டுப்படுத்தப் படாவிட்டால் உலகில் பல தீவுகள் கடலில் மூழ்கி விடும். கடல் மட்ட உயர்வால் சென்னை, கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 7 இந்திய நகரங்கள் கடலில் மூழ்கி விடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது'' என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-ஆவது ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் உறுதியான செயல்திட்டங்கள் எதுவும் இல்லாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. உலகம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதைத் தடுக்க ஒருங்கிணைந்து, விரைந்து செயல்பட வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் உணர வேண்டும்.

    தொழிற்புரட்சி காலத்திற்கு முன் 14 டிகிரி செல்சியசாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்தன் விளைவாக மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், அதை 2 டிகிரி செல்சியஸ், அதாவது 16 டிகிரி என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்கவும், முடிந்தால் இதை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்றும் கடந்த 2015-ஆம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. அந்த இலக்குகளை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

    புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முற்றிலுமாக கைவிடுவது குறித்து உறுதியாக முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உலகின் வளர்ந்த நாடுகளுக்கும், சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாததால் அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிலக்கரி பயன்பாட்டை 2030-க்குள் முழுமையாக கைவிடுவதற்கு பதிலாக குறைக்கலாம் எனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு காலநிலைமாற்ற மாநாட்டில் முதன்முதலாக எடுக்கப்பட்டிருப்பது ஒருவகையில் வரவேற்கத்தக்கது தான். ஆனாலும் நிலக்கரி பயன்பாட்டை முற்றாக கைவிடுவது தான் புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை எட்டுவதற்கு உதவும்.

    புவிவெப்பநிலை உயர்வை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் பாரிஸ் உடன்படிக்கையின் மையக்கரு ஆகும். அது சாத்தியம் இல்லாத பட்சத்தில் 2 டிகிரிக்குள்ளாக கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், உலக நாடுகள் இப்போது உறுதியளித்துள்ள செயல்திட்டங்களின்படி புவிவெப்ப நிலை இந்த நூற்றாண்டு இறுதிக்குள் 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும். இது பூவுலகைக் காப்பாற்றுவதற்கு எந்த வகையிலும் உதவாது.

    புவிவெப்பமயமாதல் 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றால் நிலக்கரியின் பயன்பாடு 2030-ஆம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதற்காக உலக நாடுகள் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டும். அதற்கான செலவை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளால் சமாளிக்க முடியாது என்பதால், நிலக்கரியை பயன்படுத்தி கடந்த காலங்களில் லாபம் அடைந்த நாடுகள் மானியமாக வழங்க வேண்டும் என்பது தான் வளரும் நாடுகளின் கோரிக்கை ஆகும். உதாரணமாக நிலக்கரி பயன்பாட்டை கைவிடுவது உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக 2020-க்குள் வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி டாலர் வீதம் வழங்க 2009-ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டன. ஆனால், அதை செயல்படுத்தவில்லை. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவுக்கு ஒரு லட்சம் கோடி டாலர், அதாவது சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்பது இந்திய அரசின் கோரிக்கை ஆகும். இவற்றை செயல்படுத்துவதில் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.

    2030-ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பை தடுத்தல்; மீத்தேன் மாசுக்காற்றை கட்டுப்படுத்துதல்; 2035- ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் ஊர்திகளை ஒழித்தல்; நிலக்கரி, பெட்ரோல், டீசல் இல்லாத காலத்தை உருவாக்குதல் - ஆகிய நோக்கங்களுக்காக நாடுகளுக்கிடையே தன்னார்வ ஒப்பந்தங்கள் இம்மாநாட்டில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சியளிக்கும் முன்னேற்றம் என்பதில் ஐயமில்லை.

    காலநிலை மாற்றத்துக்கு காரணமான நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை. காலநிலை மாற்றத்தால் மிகமோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது. உலக மக்கள் தொகையில் 17.5% அளவினைக் கொண்டுள்ள இந்தியாவின், வளிமண்டல மாசுபாட்டு பங்களிப்பு வெறும் 4% மட்டுமே. உலகின் சராசரி தனிநபர் மாசுக்காற்று அளவில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே இந்தியர்களின் பங்காகும். அவ்வாறு இருக்கும் போது காலநிலை மாற்றத்திற்கு காரணமான நாடுகள், இந்தியா போன்ற நாடுகளில் புவிவெப்பமயமாதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவுவது தான் நியாயமான செயலாக இருக்கும்.

    பாரிஸ் உடன்படிக்கையின்படி புவிவெப்பமயமாதல் 1.5% டிகிரிக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படுபவை உலகின் ஏழை நாடுகள் தான். புவிவெப்பமயமாதல் கட்டுப்படுத்தப் படாவிட்டால் உலகில் பல தீவுகள் கடலில் மூழ்கி விடும். கடல் மட்ட உயர்வால் சென்னை, கொச்சி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 7 இந்திய நகரங்கள் கடலில் மூழ்கி விடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய ஆபத்துகளை உணர்ந்து உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரும் ஆடம்பரத் தேவைகளைத் தவிர்த்து விட்டு, இயற்கையுடன் இணைந்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.
    இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: