Home /News /tamil-nadu /

ஹெச்.ராஜாவை தனது பாணியில் கிண்டலடித்த ஐ.லியோனி! பரப்புரை சுவாரஸ்யங்கள்

ஹெச்.ராஜாவை தனது பாணியில் கிண்டலடித்த ஐ.லியோனி! பரப்புரை சுவாரஸ்யங்கள்

அதிமுக கூட்டத்தில் ஜி.கே.வாசன் பெயரை குறிப்பிடவில்லை

அதிமுக கூட்டத்தில் ஜி.கே.வாசன் பெயரை குறிப்பிடவில்லை

திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், வெஜிடபிள் பிரியாணியை பெறுவதற்கு மக்கள் முண்டியடித்து மோதிக்கொண்டனர். இதேபோன்று, பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் தேர்தல் பரப்புரையின் போது அரங்கேறின.

  • News18
  • Last Updated :
மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ஜி.கே.வாசனின் பெயரை குறிப்பிடாததால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்: 

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. மத்திய சென்னை தொகுதிக்கான பாமக வேட்பாளர் அறிமுகக் கூட்டம், கீழ்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஜெயக்குமார், எளிமையான ஏழைப்பங்காளன் மத்திய சென்னைக்கு வேட்பாளராக கிடைத்திருப்பதாக கூறினார்.

கூட்டத்தில் ஜி.கே.வாசனின் பெயர்:

இந்தக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவரான ஜி.கே.வாசனின் பெயரை குறிப்பிடாததால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். அவர்களை அதிமுக-வினர் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் ஜெயக்குமார், நேரம் குறைவாக இருந்ததைக் கருதி, அனைவரது பெயரையும் குறிப்பிட முடியாமல் போனதாக தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து:

மதுரை பீ.பீ.குளம் பகுதியில், தேர்தல் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, வலிமையான இந்தியாவை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் மோடிதான் என்றும் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் மோடி என்றும் கூறினார்.

சின்னத்தை மட்டும் கூறி வாக்கு கேட்ட திமுகவினர்:

விருதுநகரில், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், திமுகவினர் வெறும் கை சின்னம் என குறிப்பிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. இதனால் யார் பெயரை வேட்பாளர் என்று கூறி வாக்கு கேட்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தை குறிப்பிட்டு வாக்கு சேகரித்தனர்.

அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சுவாரஸ்யம்:

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ண மூர்த்தியை அறிமுகப்படுத்தும் கூட்டம், கலசப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி அளிக்கப்பட்ட நிலையில், அதனை பெறுவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. பொறுமையை இழந்த மக்கள், தாங்களாகவே பாத்திரங்களில் இருந்து பிரியாணியை போட்டு சாப்பிடத் தொடங்கினர்.

அமைச்சர் கருப்பண்ணன் அறிவுரை:

ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், கட்சி சின்னத்தை சுவர்களில் வரைய வேண்டும் என்றார். உடனடியாக பெயிண்டரை கூட்டிக் கொண்டு போய் வரையும் பணிகளை ஆரம்பியுங்கள் என்று அதிமுக தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

திண்டுக்கல் லியோனி கருத்து:

தேர்தல் முடியும் வரை எச்.ராஜா வாய் திறக்காமல் இருந்தால், பாஜகவிற்கு சில ஓட்டுகள் கிடைக்கும் என திமுக கலை, இலக்கிய பிரிவின் மாநில தலைவர் திண்டுக்கல் லியோனி நகைச்சுவையாக தெரிவித்தார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

தொண்டருடன் அமைச்சர் வீரமணி மோதல்:

வேலூரில், அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்ட கூட்டத்தில், அவருக்கும் - தொண்டர் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜாவுக்கு சால்வை அணிவிக்க தொண்டர் ஒருவர் மேடையேறினார். இதனைக் கண்ட அமைச்சர் வீரமணி அவரை தாக்க முற்பட்டார். இதனால் அரங்கமே பரபரப்பானது.

இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள், தேர்தல் பரப்புரைகளின் போது நிகழ்ந்தன.

Also see... பாமக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஜி.கே.வாசன் பெயரை குறிப்பிடாடதால் சலசலப்பு
Published by:Vaijayanthi S
First published:

Tags: Election 2019, Election Campaign, Lok Sabha Election 2019, Lok Sabha Key Candidates

அடுத்த செய்தி