இந்தியாவை போல வேறு எந்த நாடும் மாணவர்களை உக்ரைனில் இருந்து இதுவரை அழைத்து வரவில்லை எனவும், இதுவரை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் 10 சாதனை மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் வாத்தியக் குழு ,பரதநாட்டியம், பேச்சுப்போட்டி ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன், "உடனடியாக தமிழக அரசு நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குடும்பத்தலைவிக்கு ரூபாய் 1000 வழங்கப்பட வேண்டும். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும். தமிழக அரசிடமிருந்து இதை எதிர்பார்க்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தமிழ் மாநில காங்கிரஸ். கேட்டதை விட மிகக்குறைவான இடங்களே கிடைத்தது. ஆனாலும் நாங்கள் வென்று இருக்கிறோம். கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் துணை நின்றது. அதிக இடங்கள் கிடைத்திருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்க முடியும். அதில் மாற்று கருத்து கிடையாது என்று தெரிவித்தார்.
தொடர் மழை காரணமாக பல இடங்களில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்து அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தி இருப்பது சாதாரண மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மேகதாது அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் பாலைவனமாகும் வாய்ப்பு உள்ளது. காவிரி பிரச்சனை டெல்டா மக்களுக்கு உயிர் பிரச்சனை. உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சினையில் பேபி அணையை வலுப்படுத்த வேண்டும். தமிழக அரசு கோரிக்கைகளை கேரளா அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு சிரமமில்லாமல் தங்கள் பணியை செய்ய வேண்டும். திமுக 11 மாத ஆட்சி எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு முழு செயல்பாடுகள் இல்லை. விளம்பரங்கள் அதிகம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறைவு என்றும் விமர்சித்தார்.
Also read... நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!
மேலும், இந்திய நாடு போல வேறு எந்த நாடும் மாணவர்களை இதுவரை வெளியே கொண்டு வரவில்லை. இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியா வந்தடைந்துள்ளனர். நீட் விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக வாக்கு வங்கிக்காக அரசியல் கட்சிகள் அரசியல் தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
எந்த ஒரு லாபமும் நீட் விவகாரத்தில் கிடையாது. சரியான முடிவு எடுக்க வேண்டும். அரசியல்வாதிகள் ஒத்த கருத்தோடு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: GK Vasan, Local Body Election 2022