ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

செஞ்சி அருகே சாதிச்சான்று இல்லாததால் ஒரு தலைமுறையே பள்ளிப்படிப்பை தாண்ட முடியாத அவல நிலை

செஞ்சி அருகே சாதிச்சான்று இல்லாததால் ஒரு தலைமுறையே பள்ளிப்படிப்பை தாண்ட முடியாத அவல நிலை

சாதிச்சான்று கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள்

சாதிச்சான்று கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள்

சாதிச்சான்றிதழ் கேட்டால் நீங்கள் ஏன் பன்றி மேய்க்கவில்லை? நீங்கள் ஏன் சாட்டையால் அடித்துக்கொண்டு பிச்சை எடுக்கவில்லை என அதிகாரிகள் கேட்பதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாதிச்சான்று இல்லாததால் ஒரு தலைமுறையே 12-ஆம் வகுப்பை தாண்ட முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நர்சிங் படிக்க வேண்டிய பெண்ணும், போலீஸ் ஆக வேண்டிய இளைஞரும் கனவுகள் தவிடுபொடியானதால் தவித்து வருகின்றனர்.

  செஞ்சி அருகில் மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சேரானூர் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் இந்து தொம்பன் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த காலங்களில் சாட்டையால் தங்களை தாங்களே அடித்துக்கொண்டு யாசகம் பெற்று வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது விவசாய கூலிகளாக மாறியுள்ளனர்.

  மேலும் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க ஆரம்பித்துள்ளனர். இதன் விளைவாக தற்போது இப்பகுதியில் இருந்து 55 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் பள்ளி படிப்பை தாண்ட முடியாது. இதற்கு காரணம் இவர்களிடம் இந்து தொம்பன் என்ற சாதிச்சான்றிதழ் இல்லை. கல்லூரிகளில் சேர சாதிச்சான்றிதழ் கேட்பதால் பள்ளி படிப்புடன் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்கின்றனர்.

  பட்டப்படிப்பு தான் படிக்க முடியவில்லை படித்த படிப்பை வைத்தாவது போலீஸ் காவலர் ஆகிவிடலாம் என நினைத்தால் அதற்கும் முட்டுக்கட்டையாக சாதிச்சான்றிதழ் இருப்பதாக கூறுகிறார் இந்து தொம்பன் சமூகத்தை சேர்ந்த நவீன்குமார்.

  இதே போன்று இப்பகுதியில் வசிக்கும் பிரபாவதி என்ற பெண், பி.எஸ்சி நர்சிங் படிக்க கல்லூரியில் சேர இருந்த நிலையில், சாதிச்சான்று இல்லாததால் படிக்க முடியாமல் அருகில் உள்ள கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். படிப்பதற்காக சாதிச்சான்றிதழ் கேட்டு ஆட்சியர் காலில் விழுந்து மன்றாடிய போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறுகிறார் இவர்.

  படிக்க இந்து தொம்பன் சாதிச்சான்றிதழ் கேட்டால் நீங்கள் ஏன் பன்றி மேய்க்கவில்லை? நீங்கள் ஏன் சாட்டையால் அடித்துக்கொண்டு பிச்சை எடுக்கவில்லை என அதிகாரிகள் கேட்பதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தங்களை தாங்களே தாக்கிக்கொண்டு கையேந்தி நிற்காமல் கூலி வேலைக்கு சென்று தங்கள் குழந்தைகளை படிக்கவைக்க நினைக்கும் தங்களை பழைய நிலைக்கே, அதிகாரிகள் தள்ளுவதாக கூறுகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Villupuram