மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழர்களுக்கும்
வேலை மறுக்கும், கடலூர் மாவட்டத்தை
பாலைவனமாக்கும் என்.எல்.சி வெளியேற
வலியுறுத்தி பா.ம.க. நாளை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, பா.ம.க. தலைவர், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் மக்களின் நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைத்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், உள்ளூர் மக்களின் நலன்களையும், சுற்றுசூழலையும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. மண்ணின் பிரச்சினைகளையும், மக்களின் சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினாலும் அதை செவி மடுக்க என்.எல்.சி மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் இருந்து 36,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு தான் ஆண்டுக்கு ரூ.10,662 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக என்.எல்.சி வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் மூலதனமான நிலங்களை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு போதிய இழப்பீடோ, வேலை வாய்ப்போ வழங்கப்படவில்லை.
நிலக்கரி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் என்.எல்.சி சுமார் ரூ.45,000 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில், அதனால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.447 கோடி, அதாவது 1% தொகையை மட்டுமே என்.எல்.சி. ஒதுக்கியுள்ளது. இது மிக மிகக் குறைவு. இவ்வளவு தீமைகளை செய்து வரும் என்.எல்.சி நிறுவனம், இன்னும் 12,250 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, நிலக்கரியை வெட்டி எடுக்கத் தொடங்கினால் கடலூர் மாவட்டம் பாலவனமாக மாறுவதை தடுக்கவே முடியாது.
என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பொறியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்து நிலை பதவிகளிலும் பிற மாநிலத்தவர் தான் நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களும் கூட பிற மாநிலங்களிலிருந்து தான் வரவழைக்கப்படுகின்றனர். அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் மண்ணின் மைந்தர்களும், நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் அளித்தவர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
என்.எல்.சி நிறுவனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஒதிஷா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு செய்யப்படும் நலத்திட்டங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், நிலம் கொடுத்த கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் செலவிடப்படும் தொகை மிக மிகக் குறைவு ஆகும். கடலூர் மாவட்டத்தின் வளங்களை சுரண்டி, வட இந்தியர்களுக்கு வளம் சேர்க்கும் பணியைத் தான் என்.எல்.சி செய்கிறது.
நிலம் கொடுத்த மண்னின் மைந்தர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க என்.எல்.சி. நிறுவனம் மறுக்கிறது; சுற்றுச்சூழலை சீரழித்து கடலூர் மாவட்டத்தை பாலவனமாக்குகிறது; இத்தகைய நிறுவனம் தேவையில்லை என்பது தான் ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும்.
எனவே, கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் நாளை காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான நான் தலைமையேற்றவுள்ளேன். இப்போராட்டத்தில் பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள், என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NLC, PMK, Pmk anbumani ramadoss