உங்கள் என்.ஜி.ஓவுக்காக விவசாயிகளிடம் பொய்யை சொல்லுவதா? கார்த்தியை விவாதத்துக்கு அழைக்கும் காயத்ரி ரகுராம்

உங்கள் என்.ஜி.ஓவுக்காக விவசாயிகளிடம் பொய்யை சொல்லுவதா? கார்த்தியை விவாதத்துக்கு அழைக்கும் காயத்ரி ரகுராம்

கார்த்தி, காயத்ரி ரகுராம்

உங்கள் என்.ஜி.ஓ ஆதாயத்துக்காக பொதுமக்களிடம் பொய்யைத் திணிக்காதீர்கள் என்று கார்த்தியை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.

  • Share this:
    மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் லட்சக்கணக்கானோர் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். தமிழகத்திலும் இன்று தி.மு.க கூட்டணி சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, நேற்று விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையில், ‘நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள் பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும் கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும் பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாக பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.

    நாளும் பொழுதும் பாடுபட்டால்தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு குடும்பத்தாரை பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலை தூரம் பயணித்து வந்து வீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.

    தண்ணீர் பற்றாக்குறை இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பாதிப்படையும் என கருதுகிறார்கள்.

    தங்கள் மண்ணில் தங்களுக்கு இருக்கும் உரிமையும் தங்கள் விளை பொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெருமுதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும் ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது ஆகவே போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அவர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தநிலையில், கார்த்தியின் ட்விட்டுக்கு பதிலளித்துள்ள நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், ‘விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் மிகவும் ஆபத்து ஏற்படுத்தும் பொய்களை திணிக்கிறீர்கள் என்பதை நான் சவால் விட்டு தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய தொண்டு நிறுவன விருப்பத்துக்காக நீங்கள் இதனைச் செய்கிறீர்கள். விசாயிகளுக்கு இந்தச் சட்டம் குறித்து தெரியும் மற்றும் அரசின் மூலம் அவர்கள் எவ்வளவு பயனடைகிறார்கள் என்பதும் தெரியும்.



    ஊடகங்களில் நேரடி விவாதத்துக்கு வந்து வல்லுநர்களுடன் விவாதம் செய்யுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள். எங்களுடைய விவசாய அணியின் தலைவருடன் விவாதத்துக்கு வர வேண்டும் என்று கார்த்திக்கு சவால் விடுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Karthick S
    First published: