ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருமாவளவன் பற்றி சர்ச்சை ட்வீட் - காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்!

திருமாவளவன் பற்றி சர்ச்சை ட்வீட் - காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கம்!

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

திருமாவளவன் மீது கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வந்த நடிகையும், பாஜக ஆதரவாளருமான நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் பேசிய திருமாவளவன்,  "அயோத்தி தீர்ப்பு குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்தார். அப்போது பேசிய அவர், பாபர் மசூதி இருந்த இடத்தில் தொல்லியல்துறை நடத்திய ஆராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அந்த ஆய்வில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும், கூம்பு போல அதன் அமைப்பு இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்றும் பேசினார். அதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட திருமாவளவன், எனது பேச்சில் ஒரு சில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என்று சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும் அதற்கான நான் வருந்துகிறேன்” என்றார்.

இந்நிலையில் பாஜக ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள் பலரும் சமூகவலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். அந்த வரிசையில் நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் கடுமையான வார்த்தைகளில் திருமாவளவனை விமர்சித்ததோடு, இந்து மதத்தை விமர்சித்த திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று பதிவிட்டிருந்தார். அதேசமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

காயத்ரி ரகுராம் தெரிவித்த கருத்துகளைக் கண்டு கொதித்துப் போன விசிக தொண்டர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விசிகவினரிடம் வந்த தொலைபேசி அழைப்புகளையும் காயத்ரி ரகுராம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது விதிகளை மீறியதாக நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

Also see:

Published by:Sheik Hanifah
First published:

Tags: Gayathri Raguramm