HOME»NEWS»TAMIL-NADU»gang who rolled over rs 50 crore claiming to be an interest free jewelery loan in chennai crime video vai

சென்னையில் வட்டியில்லாமல் நகைக் கடன் எனக் கூறி ரூ.50 கோடி சுருட்டிய கும்பல் கைது...

சென்னையில் இஸ்லாமிய வாடிக்கையாளர்களின் நகைகளை ரூபி ஜுவல்லர்ஸ் மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நகைக் கடை உரிமை்யாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் 500 கிலோ நகைகளை சுருட்டியதும் அவற்றில் பாதிக்கு மேற்பட்ட நகைகளை பிரபல நகை அடகு கடையில் அடகு வைத்து 50 கோடி ரூபாய் பெற்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

  • Share this:



சென்னை மேற்கு மாம்பலம் மேட்லி சாலை சுரங்கப்பாதை அருகே அமைந்துள்ளது ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் அண்ட் பேங்கர்ஸ். சையத் ஹிப்சார் மற்றும் அவரது மகன்களான ரகுமான் மற்றும் அனிஷ் ஆகியோர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்லாமிய சட்டப்படி நகைகளுக்கு வட்டியில்லாமல் கடன் தருவதாக அறிவித்தனர். அந்தக் கடனும் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.

அந்த அறிவிப்பை நம்பி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் தங்கள் நகைகளை இந்த நிறுவனத்தி்ல் அடகு வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் நகைக் கடன் அளிக்கப்பட்டுள்ளது. 2018 - 2019ம் ஆண்டுகளில் வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பித் தருவதில் கடை நிர்வாகம் பிரச்னை செய்து வந்தது.



கடையின் உரிமையாளர் ரஹ்மான் ஹிப்சார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது நிறுவனம் திவாலானதாக 2019ம் ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் அறிக்கை அளித்தார். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஏப்ரல் 29ம் தேதி ரூபி ராயல் ஜுவல்லர்ஸ் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்தத் தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள், கடை முன்பு குவியத் தொடங்கினர்; அப்போதுதான் கடை உரிமையாளர்களும் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரளித்தனர். இந்த வழக்கில், நிறுவன உரிமையாளர்கள் 500 கிலோ நகைகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவானது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து நகைகளை மீட்டு கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து நிறுவன உரிமையாளர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் சையது ரகுமான், அன்சுர் ரகுமான் மற்றும் ஊழியர்களான ரிகானா, சஜிதா, ஷஹீனா என 5 பேரை கைது செய்தனர் போலீசார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமியர்களிடம் வட்டியில்லா நகைக்கடன் எனக் கூறி, ஒரு சவரன் நகைக்கு குறைந்த பணம் கொடுத்துள்ளனர் ரூபி ஜுவல்லர்ஸ். இப்படி சுருட்டிய 500 கிலோ நகைகளில், 350 கிலோ நகைகளை, சென்னையில் உள்ள பிரபல நகை அடகு கடை, ஒரு வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனம் ஆகியவற்றில் அதிக பணத்திற்கு அடகு வைத்துள்ளனர்.

மேலும் படிக்க...முதல்முறையாக 50,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்.. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதால் புதிய உச்சம்....

நகைகளை அடகு வைத்து 50 கோடி ரூபாய் வரை பணத்தை சுருட்டியுள்ளனர் ரூபி ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள் என்கின்றனர் போலீசார். மேலும் 15 கோடி ரூபாய் மதிப்பில் 43 சொத்துக்களை ரூபி ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள் வாங்கியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கைதான ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 வீடியோ






உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: