பெண்களின் செல்போன்... அந்தரங்க புகைப்படங்கள் திருட்டு... மிரட்டி பணம் பறிப்பு - சிக்கிய கும்பல்

ராமநாதபுரத்தில் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய கும்பல் கைது

தனிமையில் வாழும் பெண்களை நட்பு வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பலை ராமநாதபுரம் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  அந்தரங்க வீடியோவை காட்டி ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியின் செல்போன் எண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது.

  விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் ஏர்வாடி பகுதியில் வசித்து வருவதாகவும், தான் கணவரால் கைவிடப்பட்டவர் எனவும், அதே பகுதியில் உள்ள ஏர்பாத் நெட் கபே என்ற செல்போன் ரீசார்ஜ் கடைக்கு சென்று வரும்போது அங்கு பணிபுரிந்த சகாபுதீன் என்பவருடன் நட்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

  ரீசார்ஜ் செய்யும்போது தனது எண்ணை தெரிந்துகொண்ட சகாபுதீன், தன்னுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறியதாக அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்

  ஆசை காட்டி, ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும், அதை ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துகொண்டு இப்போது பணம் கேட்டு ஒரு கும்பலே தன்னை மிரட்டுவதாகவும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

  அவ்வாறு பணம் தரவில்லை என்றால் அந்தரங்க வீடியோக்களை உள்ளூர் வாட்ஸ் அப் குழுவில் அனுப்பிவிடுவேன் எனவும் அக்கும்பல் மிரட்டி, தற்கொலைக்கு தூண்டினார்கள் எனவும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

  எஸ்.பி. தலைமையில் களமிறங்கிய தனிப்படை போலீசார், அதிரடியாக கடையில் சோதனையிட்டதுடன் கடை உரிமையளர் பாதுஷா, பணியாளர் சகாபுதீன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் பகீர் பின்னணி அம்பலமானது.

  கடை வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பணியாளர் சகாபுதீன் கையாடல் செய்து லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டதாக மோதல் வெடித்துள்ளது.

  கடை உரிமையாளர் பாதுஷா அவருடைய நண்பர் ஹாஜி ஆகியோருடன் சேர்ந்துகொண்டு சகாபுதீனை அடித்து அவரது செல்போனை பிடுங்கி மிரட்டியதாக கூறப்படுகிறது.

  சகாபுதீனின் செல்போனில், பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்ததை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  தான் கடையில் திருடிய பணத்தை இந்த பெண்களுக்கு கொடுத்துவிட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை என்றும் சகாபுதீன் கூறி சமாளித்துள்ளார்.

  விசாரணையில், கடைக்கு வரும் தனிமையில் வாழும் பெண்களை குறிவைத்து, அவர்களது செல்போனில் any desk செயலியை பதிவிறக்கம் செய்து அவர்களது அந்தரங்க புகைப்படங்களை சகாபுதீன் திருடி வந்துள்ளார்.

  அந்த புகைப்படங்களை பெயர் வாரியாக பட்டியல் செய்து தனது கனிணியில் சேமித்து வைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டியுள்ளார்.

  அவர்களை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து அதை ரகசியமாக வீடியோவும் செய்து வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக மிரட்டிவந்துள்ளர்.

  இந்த கொடூரத்தை போலீசாரிடம் சொல்லாமல், இருக்க தங்களுக்கு பணம்தர வேண்டும் என நேரடியாக அப்பெண்களின் குடும்பத்தாரின் செல்போன் எண்களுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி மிரட்டியுள்ளது இந்த கும்பல்.

  உள்ளூரிலிருந்து போட்டோக்களை அனுப்பினால், சிக்கிக்கொள்வோம் என வெளிநாட்டில் வசித்துவரும் சையத் அலிம் கவுல் என்பவரின் உதவியை நாடியுள்ளனர்.

  அவரது செல்போன் எண்ணிலிருந்து அந்தரங்க புகைப்படங்களை பலருக்கும் அனுப்பி, பெண்களிடம் நகை, பணத்தை கேட்டு மிரட்டியுள்ளது இந்த கும்பல்.

  இந்த கும்பலின் தொல்லை தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த ஒரு பெண்மணி, அண்மையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மோசடி செய்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி எடுத்த நடவடிக்கையை வைத்து புகார் அளிக்க முன் வந்துள்ளார்.

  தடை செய்யப்பட்ட லாட்டரி, சூதாட்டம் போன்ற சட்டவிரோதமான செயல்களை அக்கடையில் அரங்கேற்றியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.

  கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாதுஷா, சகாபுதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  தலைமறைவாக இருக்கும் ஹாஜி என்பவரை தேடி வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள சையத் அலிம் கவுலை விசாரிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

  முன்பு பதிவு செய்த அந்தரங்க படங்களை காட்டி, இப்போது மிரட்டும் ஆண்களை கண்டு பெண்கள் அச்சப்படாமல் 9489919722 எண்ணில் புகார் அளிக்க முன்வரவேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  மேலும் படிக்க...

  வேலூரில் புதுமாப்பிள்ளை தற்கொலை - மாமியாரின் மிரட்டல் காரணமா?

  இணையதள சேவை மையம், செல்போன் ரீசார்ஜ் கடைகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

  தனிமையில் இருக்கும் போது, அதை செல்போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வேதனைக்குரியதாக உள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: