கதறக் கதற கொடூரமாகத் தாக்கிய கும்பல்: அவமானத்தால் விஷம் குடித்த இளைஞர்

தாக்குதல் நடத்தும் கும்பல்

வலி தாங்க முடியாமல் ராகுல் கதறியபடி கெஞ்சியும் விடாமல் தாக்கியுள்ளனர். இந்தக் காட்சிகளை லட்சுமணனின் நண்பர்களே வீடியோவாகப் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

 • Share this:
  தஞ்சாவூரில் 30 ஆயிரம் ரூபாயைத் திருடியதாக சந்தேகப்பட்டு கண்களைக் கட்டி கொடூரமாகத் தாக்கிய கும்பலால், அவமானமடைந்த இளைஞர், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

  தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டை பூண்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் 22 வயதான ராகுல்; பக்கத்து கிராமமான கோனுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இருவரும் நண்பர்கள். பிப்ரவரி 1ம் தேதி லட்சுமணன் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாயைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அந்தப் பணத்தை ராகுல்தான் எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில், லட்சுமணனும் அவரது நண்பர்களும் ராகுலை அருகில் உள்ள ஒரு இடத்திற்கு வரவழைத்து விசாரித்துள்ளனர்.

  தான் பணத்தை எடுக்கவில்லை என்று ராகுல் கூறியும் நம்பாத லட்சுமணன் தரப்பு, அவரது கண்களைத் துண்டால் கட்டி, இரு கைகளையும் இரண்டு பேர் பிடித்து மரத்தோடு ஒட்டி நிற்க வைத்துள்ளனர். பின்னர் கம்பால் ராகுலின் பின்புறத்தில் கடுமையாகத் தாக்கினர்; வலி தாங்க முடியாமல் ராகுல் கதறியபடி கெஞ்சியும் விடாமல் தாக்கியுள்ளனர். இந்தக் காட்சிகளை லட்சுமணனின் நண்பர்களே வீடியோவாகப் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.  ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்த ராகுலை லட்சுமணன் தரப்பு விட்டு விட்டுச் சென்றுள்ளது. சமூக வலைதளங்களில் தனக்கு திருட்டுப் பட்டம் கட்டி வீடியோ வெளியானதை அறிந்த ராகுல் அவமானமடைந்து புதன்கிழமை எலி மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

  பணம் எடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராகுலைத் தாக்கியதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். ராகுல் தாக்கப்படும் வீடியோவைப் பார்த்த அம்மாப்பேட்டை போலீசார், ராகுலிடம் புகாரைப் பெற்று லட்சுமணன், லட்சுமணனின் நண்பர்கள் 25 வயதான விக்னேஸ்வரன், 24 வயதான விவேக், 25 வயதான பார்த்திபன், 24 வயதான சரத், 25 வயதான ஐயப்பன் ஆகிய 6 பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

  6 பேர் மீதும் கொலை முயற்சி, விக்னேஸ்வரன் மற்றும் விவேக் ஆகிய 2 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  மேலும் படிக்க.... குழந்தைக்காக ஐந்து ரூபாய் கேட்ட மனைவி: அழுத குழந்தையை ஆத்திரத்தில் தரையில் அடித்துக் கொலை செய்த கணவன்: மகாராஷ்டிரா கிராமத்தில் பயங்கரம்

  30 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதற்காக, இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  =====================================

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Suresh V
  First published: