திருப்பத்தூரில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என சட்டவிரோதமாக கண்டுபிடித்து சொல்லும் கும்பல் கைது

திருப்பத்தூரில் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என சட்டவிரோதமாக கண்டுபிடித்து சொல்லும் கும்பல் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில், கருவில் இருப்பது ஆணா பெண்ணா என சட்டவிரோதமாக கண்டுபிடித்து சொல்லும் கும்பலைச் சேர்ந்த போலி மருத்துவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், கருவில் இருப்பது ஆணா பெண்ணா என சட்டவிரோதமாக கண்டுபிடித்து சொல்லும் கும்பலைச் சேர்ந்த போலி மருத்துவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

  • Share this:
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதை தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். விசாரணையில், திருப்பத்தூர் அருகே, ஒரு கும்பல் சட்டவிரோத கரு பாலினம் கண்டறிதலில் ஈடுபடுவது தெரியவந்தது. அதையடுத்து ஒரு கர்ப்பிணியை ஏற்பாடு செய்து அந்தக் கும்பலோடு அதிகாரிகள் பேச வைத்தனர். கர்ப்பிணியிடம் பேசிய சுகுமார் என்பவர், குறிப்பிட்ட இடத்திற்கு மாலையில் வரும்படி கூறியுள்ளார். கர்ப்பிணியின் செல்போனில் செல்போன் ட்ராக்கர் செயலியை நிறுவிய அதிகாரிகள் அவரை அங்கு அனுப்பினர்.

கர்ப்பிணியும் திருப்பத்தூர் அருகே உள்ள மொளகாரன்பட்டிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை இளவரசி என்ற பெண் அழைத்துக் கொண்டு ஒரு வீட்டின் மாடிக்கு சென்றுள்ளார். அதற்குள் இடத்தைக் கண்டுபிடித்து விட்ட அதிகாரிகள் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.

சத்தம் கேட்டு எச்சரிக்கையடைந்த சுகுமாரும், இளவரசியும் தங்கள் காரில் ஏறித் தப்பி விட்டனர். அங்கிருந்த மற்றொரு போலி மருத்துவர் 38 வயதான சதீஷ்குமார், ஸ்கேன் செய்யும் இயந்திரத்தோடு அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டார்.

அவர்களிடம் தப்பியோட முயன்றபோது அதிகாரிகள் துரத்தி்ப் பிடித்தனர். அப்போது ஆத்திரத்தில் ஸ்கேன் இயந்திரத்தை தரையில் அடித்து உடைக்க முயன்றார் சதீஷ்குமார். இயந்திரத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள் சதீஷ்குமாரைக் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், போலி மருத்துவரான சுகுமார், இளவரசி, சதீஷ்குமார் கும்பல், 8000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கட்டணத்திற்கு சட்டவிரோத கரு பாலினம் கண்டறிதலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர்களில் சுகுமார் ஏற்கனவே பலமுறை கைதாகி வெளியில் வந்தவர். அதன்பின்னும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க... Exclusive | புதுச்சேரியில் திரைப்பட பாணியில் தீவுக்குள் சோதனை செய்த போலீஸ்.. 8,000 லிட்டர் கள்ளச்சாராய மூலப்பொருள்கள் அழிப்பு..

மேலும் இந்தக் கும்பல் தனது வீட்டின் மாடியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வீட்டின் உரிமையாளருக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு மிக ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளனர். தலைமறைவான சுகுமாரையும் இளவரசியையும் போலீசார் தேடி வருகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: