• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • 8 வழிச் சாலைக்கு 50,000 ரூபாய், கஜாவுக்கு வெறும் 600 ரூபாயா? ராமதாஸ் கண்டனம்

8 வழிச் சாலைக்கு 50,000 ரூபாய், கஜாவுக்கு வெறும் 600 ரூபாயா? ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ்

ராமதாஸ்

8 வழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும்போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, இப்போது அதில் கிட்டத்தட்ட நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்?

 • News18
 • Last Updated :
 • Share this:
  எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும்போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, கஜா புயலால் சேதமடைந்த ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

  புயல் நிவாரண நிதி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக மோசமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால், அங்குள்ள மக்களிடையே எழுந்துள்ள கோபமும், அக்கோபம் ஆட்சியாளர்கள் மீது திரும்புவதையும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

  கஜா புயலால் காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், சேதங்களும் வரலாறு காணாதவை. அங்குள்ள மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக சேர்த்த அனைத்தையும் ஒற்றை இரவில் இழந்துவிட்டனர். கஜா புயல் தாக்குவதற்கு முந்தைய நாள் இரவு வரை கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் அடுத்த நாள் காலையில் ஒன்றுமில்லாதவர்களாக மாறிவிட்டனர். அவர்கள் வாழ்வாதாரம் முழுவதையும் புயல் வாரி சுருட்டி வீசிவிட்டது.

  முதல் நாள் இரவு வரை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் உணவு வழங்கியவர்கள் அடுத்த நாள் காலையில் ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்களாகிவிட்டனர். இந்த வலி எவ்வளவு கொடுமையானது என்பதை அனுபவிக்கும் மக்களால் மட்டுமே உணர முடியும்.

  பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஒருவேளை உணவு வழங்குவதற்குக் கூட தமிழக அரசு ஏற்பாடுகளை செய்யவில்லை. புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்ற அமைச்சர்கள், சுற்றுலா சென்றதாக கருதிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார்களே தவிர மக்கள் குறைகளை களையவில்லை.

  பாதிக்கப்பட்ட பகுதில்களில் நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, அதாவது ஏக்கருக்கு ரூ.5400 வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது. ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  8 வழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும்போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, இப்போது அதில் கிட்டத்தட்ட நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? தென்னை மரங்களில் ஒருமுறை தேங்காய் பறித்தாலே இதைவிட அதிக வருமானம் கிடைக்கும் எனும் நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே அமையும். இது போதுமானதல்ல.

  சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது. துயரங்களைப் போக்காது.

  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் முதலமைச்சர் மக்களின் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  Also watch

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:DS Gopinath
  First published: