• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சாய்ந்த தென்னை மரங்களை நடவு செய்ய 3 ஆண்டுகளாகும்: பல்கலை துணை வேந்தர் குமார்

சாய்ந்த தென்னை மரங்களை நடவு செய்ய 3 ஆண்டுகளாகும்: பல்கலை துணை வேந்தர் குமார்

கஜா புயலால் முறிந்த மரங்கள்

கஜா புயலால் முறிந்த மரங்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் சாய்ந்து போன 31 லட்சம் மரங்களுக்கு மாற்றாக புதிய தென்னை மரங்கள் நடவு செய்ய இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக  துணை வேந்தர் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேளாண் பல்கலைக்கு சொந்தமான ஆராய்ச்சி மையங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கைவசம் உள்ள நெல் விதைகளை உடனடியாக புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் 31 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன.

    31 லட்சம் தென்னை மரங்களை நேராக நிமிரத்தி காப்பாற்றுவது கடினம். 5 அல்லது 6 ஆண்டுகள் ஆன மரங்களை நிமிர்த்தி வைத்து 3 மாதங்களில் காப்பாற்ற முடியும். புதியதாக 25 லட்சம் தென்னை நாற்றுகள், கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவை. இதனை உற்பத்தி்செய்ய 40 லட்சம் தேங்காய் விதைகள் தேவைப்படும்.

    புதியதாக தென்னை நாற்றுகள் வாங்க கர்நாடக அரசுடன் பேசி வருகின்றோம். அங்கிருந்து 5 லட்சம் நாற்றுகள் வரை வாங்க முடியும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறோம்.

    வருங்காலத்தில் புயலால் இதுபோன்ற சேதம் ஏற்படாமல் இருக்க, தென்னை நடவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். சாய்ந்து போன 8 ஆண்டுகளுக்கு மேலான தென்னை மரங்களை மீண்டும் காப்பாற்றுவது கடினம். சாய்ந்த ஒவ்வொரு மரத்தையும் காப்பாற்ற 500 ரூபாய் வரை செலவாகும்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இருந்து ஒரு குழு கஜா புயல் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு சென்று இருக்கின்றது. கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எங்கெல்லாம் நர்சரி போட முடியும் என்பதை நேரில் பார்த்து அங்கு நர்சரி அமைக்க இருக்கிறோம்.

    10 அல்லது 15 நாட்களில் புதிய தென்னை நாற்று நடவிற்கான பணிகள் துவங்க இருக்கிறோம். புயலால் நெல் பாதிப்பு அதிகளவு இல்லை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாழைக்கு இன்சூரன்ஸ் செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். சாய்ந்து போன 31 லட்சம் தென்னை மரங்களுக்கும் மாற்றாக புதிய தென்னை மரங்கள் நடவு செய்ய இரண்டு அல்லது மூன்று வருடங்களாகும்’’ என்று வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: