முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முன்னாள் அதிமுக அமைச்சர்களும்; லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளும்! இதுவரை சோதனையின் முழு விவரங்கள்

முன்னாள் அதிமுக அமைச்சர்களும்; லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளும்! இதுவரை சோதனையின் முழு விவரங்கள்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என யார் யார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கி எவ்வளவு சொத்து சேர்த்துள்ளனர் என்பதை பற்றிய செய்தி தொகுப்பு.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என யார் யார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கி எவ்வளவு சொத்து சேர்த்துள்ளனர் என்பதை பற்றிய செய்தி தொகுப்பு.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என யார் யார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கி எவ்வளவு சொத்து சேர்த்துள்ளனர் என்பதை பற்றிய செய்தி தொகுப்பு.

  • News18 Tamil
  • 5-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த அதிமுக ஆட்சியின் போது வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக ஆட்சி காலத்தில் தங்களது பெயரிலும் தங்களது மனைவி, மகன், மகள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் மீது சொத்துக்கள் வாங்கி வருமானத்தை விட பல மடங்கு சொத்துக்கள் சேர்த்தது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையின் முடிவில் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 40 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடிர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என யார் யார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கி எவ்வளவு சொத்து சேர்த்துள்ளனர் என்பதை பற்றிய செய்தி தொகுப்பு.

1) எஸ்.பி. வேலுமணி

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2016-ம் ஆண்டு வரை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர் எஸ்.பி. வேலுமணி.

கிராமப்புறங்களில் தெரு விளக்குகள் எல்இடி விளக்குகள் பொருத்துவதாக நிறுவனங்களுக்கு டெண்டர் விட்டு ரூபாய் 500 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் இவருக்கு சொந்தமான சென்னை, கோவை, தாம்பரம், ஆவடி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதம் 22 ம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, நகைக்கடை, அலுவலகம், உறவினர்களின் வீடு, உதவியாளர் வீடு என 6 மாவட்டங்களில் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், உதவியாளர் சந்தோஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அப்போது நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், வங்கியா வளங்கள் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தற்போது மூன்றாவது முறையாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

2)  சி. விஜயபாஸ்கர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு சொந்தமான சென்னை திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 300 உள்நோயாளி படுக்கை வசதிகளுடன் இரண்டு வருடங்களாக செயல்படுவதாகவும், மருத்துவமனையானது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருந்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மேற்படி மருத்துவமனைக்கு Essentiality Certificate வழங்கியுள்ளார்.

Also Read : அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின்வெட்டு - 2 ஊழியர்கள் பணியிட மாற்றம்

இதன் அடிப்படையில் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் மதுரை, தேனி, புதுக்கோட்டை திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் இன்று காலை முதல் 13 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக வருமானத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 18 ம் தேதி அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு 6 கோடி ரூபாய்க்கான சொத்துகளை அவர் வைத்திருந்ததாகவும் அந்தச் சொத்துகள் 57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் சொல்லப்பட்டுள்ளது. இதனை எடுத்து அக்டோபர் 18ஆம் தேதி 43 இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

3) எம்.ஆர். விஜயபாஸ்கர்

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர். அத்துறையில் 8 நிறுவனங்களிடம் இருந்து, ஜி.பி. எஸ். கருவிகளை வாங்குவதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து கரூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த ஜூலை மாதம் 21 ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக 55 சதவிகிதம் வரை சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஜூலை 22ஆம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் முடிவில் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.25.56 லட்சம், பல சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

4) கே.சி.வீரமணி

கடந்த அ.தி.மு.க அட்சியின் போது 2016-21 காலகட்டத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தாக வந்த புகார்களின் அடிப்படையில், கடந்த 2021 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதியன்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். கே.சி.வீரமணி தொடர்புடைய 35 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் ரூ.34 லட்சம் பணம், 9 சொகுசு கார்கள், ஐந்து கம்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், 623 சவரன் தங்க நகை, 47 கிராம் வைர நகைகள், ஏழு கிலோ வெள்ளி நகைகள் இவற்றுடன் நிறைய வங்கி புத்தகங்கள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக 2019-ம் வருடம், பிப்ரவரி மாதத்தில் மத்திய வருமான வரித்துறை அதிகாரிகளால் கே.சி வீரமணிக்கு சொந்தமான 32 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இடம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில், பல கோடி ரூபாய் பணம் சட்டவிரோதமான முறையில் கைமாறியதாக வந்த ரகசியத் தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பெற்றது.

5) தங்கமணி

கடந்த 2016-2021 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி.

இவர் அமைச்சராக இருந்த போது மின்சாரத்துறையில் முறைகேடு நடைபெற்றதாகவும், நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகவும் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து 2021  டிசம்பர் மாதம் தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் 2,37,34,458 ரூபாய் பணம், 1.13 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் கணக்கில் வராத 2,16,37,000 ரூபாய் பணம், சான்று பொருட்களான கைபேசிகள் பல வங்கி பாதுகாப்பு பெட்டகங்ககளின் சாவிகள், கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக கடந்த ஜூலை 20 ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டு ரொக்கம் கணக்கில் காட்டப்படாத பணம் சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

6) கே.பி அன்பழகன்

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் 2016-2021- ல் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த ஜனவரி 20 ம் தேதி அவருக்கு சொந்தமான 58 இடங்களில் அதிரெடி சோதனை நடத்தினர்.

கே.பி.அன்பழகன் முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி மல்லிகா 2ஆவது குற்றவாளியாகவும் அவரது மகன்கள் சசிமோகன், சந்திர மோகன் ஆகியோர் 3 மற்றும் 4வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். மேலும் அன்பழகனின் மருமகள் வைஷ்ணவி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தினர்.

7) காமராஜ்

முன்னாள் உணவு  மற்றும் நுகர் பொருள் வழங்குதல் துறையின் அமைச்சரான காமராஜ் 2015 - 2021 வரை ஆட்சி காலத்தில் இருந்த போது இந்த பதவியை பயன்படுத்தி ரூபாய் 58,44,38,252 சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை 7-ம் தேதி முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது மகன்களான இனியன், இன்பன் உள்ளிட்ட 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் ஜூலை 8-ம் தேதி முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான சென்னை, கோயமுத்தூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் 49 இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் ரொக்க பணம், வங்கி ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

8) KKP பாஸ்கர்

நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே பி பி பாஸ்கர் தொடர்புடைய 26 இடங்களில் கடந்த மாதம் 12 ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக தனது பெயரிலும் தனது மனைவி உமா பெயரிலும் பல்வேறு நிறுவனங்களில் பண முதலீடு செய்துள்ளார். மேலும், தனது பணிக்காலத்தில் சுமார் 5 கோடி மதிப்புடைய சொத்துக்களை வாங்கியுள்ளார்.

குறிப்பாக தனது வருமானத்தை விட 315 சதவீதம் அதிகமான சொத்துக்கள் சேர்த்திருப்பதாக இவர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்டு மாதம் 12 ம் தேதி சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: ADMK members, DVAC, Minister KP Anbalagan, Ministers, SP Velumani