தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு : என்னென்ன இயங்கும், இயங்காது?

மாதிரிப் படம்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாளான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விடுமுறை நாளான இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மார்ச் 25ஆம் தேதி சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. எனினும், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி தற்போது, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கு அமலில் உள்ள இன்று, இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி இல்லை. இந்த முழு ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கான இன்று, பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    முழு ஊரடங்கு அமலில் உள்ள இன்று, உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர், தொடர்ந்து பணியாற்றலாம். அதேபோல, தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது.

    முழு ஊரடங்கு அமலில் உள்ள இன்று மற்ற நாட்களைப்போல திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்காணிப்பதற்காக 250க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் ஒரு காவல்துறை அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் வாகன தணிக்கை பணிகளில் ஈடுபடுவார்கள். விதிகளை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கு, இரவு நேர ஊரடங்குடன் சேர்ந்து இருப்பதால் நேற்று இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று முழு ஊரடங்கு நாள் என்பதால் திருமண நிகழ்வுகளுக்கு, வாகனங்களில் செல்வதில் பல்வேறு இடையூறு ஏற்படும். என்பதால், பெரும்பாலானோர் நேற்றே சொந்த ஊர்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் புறப்பட்டு சென்றனர்.

    தமிழகத்தில் நேற்று புதிதாக 14,842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாகாக 4,086 பேருக்கும் செங்கல்பட்டில் 1,163 பேருக்கும், கோவையில் 1,004 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,66,329 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 1,00,668பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 31,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Must Read : ஏப்ரல் 26 முதல் சலூன், தியேட்டர், பெரிய கடைகள், மால்கள் திறக்க அனுமதி இல்லை - தமிழக அரசு அறிவிப்பு

     

    தமிழகத்தில், கொரோனாவில் இருந்து 9,142 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 9,52,186பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி ஒரேநாளில் 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த கொரோனா உயிரிழப்பு 13,475 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: