கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முன்களப்பணியாளர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கலாமே - தமிழக அரசுக்கு நீதிமன்றம் யோசனை

சென்னை உயர்நீதிமன்றம்

அரசின் கொள்கை முடிவு என்பதால், அரசு தான் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

  • Share this:
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தினரில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், நர்ஸ்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது என்றும், இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், அரசு தான் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், கொரோனாவுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர். இதேபோல, கொரோனா ஊரடங்கின் போது நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிடக் கோரி ஜலாலுதீன் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதுசம்பந்தமாக அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: