முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கோச்களிலே சிறந்த கோச் நான் தான்- தற்பெருமையின் உச்சத்தில் ரவி சாஸ்திரி

கோச்களிலே சிறந்த கோச் நான் தான்- தற்பெருமையின் உச்சத்தில் ரவி சாஸ்திரி

  • 1-MIN READ
  • Last Updated :

    இந்திய கிரிக்கெட்டில் இப்போது பேசுபொருளாக இருந்து வரும் ட்ரெண்டிங் கேள்விகளுக்கு ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். விராட் கோலி, பிசிசிஐ, கங்குலி இடையேயான சிக்கல்கள் முதல் அனில் கும்ப்ளே-கோலி மோதல் வரை தன் இஷ்டத்துக்கு பதிலை அடித்து விட்டுள்ளார் ரவி சாஸ்திரி.

    ஒரு மனிதருக்கு தான் செய்த காரியத்தின் மீது பெருமிதமும் லேசான கர்வமும் இருக்கலாம் ஆனால் ஆங்கிலத்தில் கூறும் hubris, சமஸ்கிருதத்தில் கூறப்படும் அகங்காரம், தமிழில் கூறப்படும் திமிர் ஆகியவை ஒருவருக்கு இருக்கக் கூடாது என்பதுதான் நமக்குக் கற்றுத்தரப்படும் அறம். இதிலெல்லாம் ரவிசாஸ்திரிக்கு நம்பிக்கை இல்லை போலும்.

    கபில் தேவ், ஜான் ரைட், கிரெக் சாப்பல், கேரி கர்ஸ்டன் என்று பெரிய ஆட்களெல்லாம் இந்திய அணியை கோச் செய்துள்ளனர், அதில் குறிப்பாக கேரி கர்ஸ்டன் தலைமைப் பயிற்சியின் போதுதான் 2011 உலகக்கோப்பையை வென்றோம், தென் ஆப்பிரிக்காவில் சென்று டெஸ்ட் தொடரை சமன் செய்தோம். ரவிசாஸ்திரி தலைமைப் பயிற்சியின் கீழ் எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லவில்லை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முன்னால் பழம்பெருமை பேசி கோலிக்கு கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தார் இவர்,இதனால் நியூசிலாந்து நமக்கு பெப்பே காட்டி டெஸ்ட் உலக சாம்பியன்களானது, இதோடு நியூசிலாந்து சென்ற போதும் உதை வாங்கினோம், இதையெல்லாம் மறந்து விட்டு என்னைப் பார் என் அழகைப்பார், நானே சிறந்த கோச் என்கிறார் ரவி சாஸ்திரி.

    ரவி சாஸ்திரியிடம் கேட்ட கேள்விகளும் அவரது அதிரடி பதில்களும்:

    ரோகித் சர்மா ஒருநாள் கேப்டன் ஆகியிருக்கிறாரே?- விராட் கோலி டி20 கேப்டன்சி வேண்டாம் என்ற பிறகே அடுத்து ரோகித் சர்மாதான். அவர்தான் ஒயிட் பந்து கேப்டனாக வேண்டும். டி20 கேப்டன் தான் ஒயிட் பந்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருக்க வேண்டும்.

    சவுரவ் கங்குலி குறித்து: எனக்கு இதில் ஒன்றுமில்லை, சில சம்பவங்கள் நிகழ்கின்றன, நீங்கள் அதற்கு ரியாக்ட் செய்கிறீர்கள். நாங்கள் கிரிக்கெட் வீரர்கள். எங்கள் இருவருக்குமே கேம் தெரியும். அதற்காக அனைத்திற்கும் நாங்கள் இருவரும் ஒத்துப் போகிறோம் என்பதல்ல. கங்குலியிடம் நிறைய பேசியிருக்கிறேன். நல்ல தொடர்பு படுத்தல் மூலம் இந்திய அணியின் சூழ்நிலையை நல்ல முறையில் கையாளலாம்.

    விராட் கோலியுடனான உறவு: விராட் கோலியிடம் நான் என்னையே காண்கிறேன். வேட்கை, தணியாத தாகம், தன்னம்பிக்கை. விராட் கோலியுடனான என் உறவு அற்புதமானது, இரண்டு ஒத்த மனநிலைக்காரர்கள் பணியை சிறப்பாகத்தானே செய்ய முடியும்.

    கும்ப்ளே-கோலி விரிசல் குறித்து: இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான ஆளுமை மோதலே அது. இருவருக்கும் ஒத்துவரவில்லை. இது அவர்கள் பிரச்சனை, என் பிரச்சனை அல்ல.

    அஸ்வின் உங்கள் கருத்தால் நொறுங்கிப் போனதாக கூறியுள்ளாரே: குல்தீப் யாதவ்வை நான் பாராட்டியது அஸ்வினைக் காயப்படுத்தினால் அதற்காக நான் மகிழ்ச்சியே அடைகிறேன், கோச் ஒரு சவால் அளிக்கிறார் என்றால் உடனே வீட்டுக்குப் போய் அழுது, நான் வரமாட்டேன் என்றா சொல்வது, நான் தவறு என்பதை அஸ்வின் நிரூப்பித்திருக்கலாமே. அதுதானே கிரிக்கெட் வீரர் செய்வது.

    தோனியை நியமித்தது குறித்து.. - எனக்கு உண்மையில் அது ஒரு பிரச்சனையே இல்லை. ஒருநாள், டி20 யைப் பொறுத்தவரை தோனியை விட கூர்மையான மதி படைத்தவர்கள் யாரும் இல்லை எனவே அவர் மூலம் அணிக்கு நல்லது நடந்தால் அது நன்மைதானே.

    சிறந்த டெஸ்ட் கேப்டன்: சந்தேகம் துளியும் இன்றி விராட் கோலிதான். உலகில் எந்த ஒரு கேப்டனும் அவர் போல பற்றுதலுடன் கேப்டன் பணியை செய்வதில்லை.

    இதுவரை இந்தியா காணாத சிறந்த கோச் யார்?- நான் தான், ரவி சாஸ்திரி.

    இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.

    First published: