முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆக்டர் டூ அமைச்சர்… உதயநிதியின் அரசியல் கிராஃப்! - காத்திருக்கும் சவால்கள்!

ஆக்டர் டூ அமைச்சர்… உதயநிதியின் அரசியல் கிராஃப்! - காத்திருக்கும் சவால்கள்!

Udhayanidhi Stalin | இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியில் தொடங்கி பல கட்சிகள் பட்டியலில் வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க வாரிசு அரசியல் விமர்சனத்தை கடுமையாக எதிர்கொண்டு வருகிறது.

Udhayanidhi Stalin | இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியில் தொடங்கி பல கட்சிகள் பட்டியலில் வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க வாரிசு அரசியல் விமர்சனத்தை கடுமையாக எதிர்கொண்டு வருகிறது.

Udhayanidhi Stalin | இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியில் தொடங்கி பல கட்சிகள் பட்டியலில் வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க வாரிசு அரசியல் விமர்சனத்தை கடுமையாக எதிர்கொண்டு வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 5-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

தற்போதைய அரசியலில் தினசரி உதயநிதி ஸ்டாலின் பெயர் தவறாமல் இடம் பிடிக்கும். தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஒரு நபராகவே மாறிவிட்டார் உதயநிதி. ஒருபக்கம் உதயநிதி ஸ்டாலின் மேல் கடுமையான விமர்சனங்கள், மற்றொரு பக்கம் உதயநிதிக்கு அளவில்லாத புகழ்ச்சி. இந்த இடைவெளிக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலின் யார்? அவர் கடந்து வந்த பாதையை முதலில் பார்த்துவிடலாம்.

2008-ம் ஆண்டு தமிழக அரசியல் களம் கருணாநிதி, ஜெயலலிதா என இவர்களை சுற்றி செயல்பட்டு இருந்த காலகட்டம். அப்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராக இருந்தார். 2008-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நடிகர் விஜய்யை வைத்து குருவி படத்தை தயாரித்தனர். அப்போது, உதயநிதியின் பெயர் செய்திகளில் அடிபடத் தொடங்கியது. குருவியை தொடர்ந்து, நடிகர்கள் சூரியாவின் ஆதவன், கமல்ஹாசனின் மன்மதன் அம்பு, ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், சிம்புவின் விண்ணைத் தாண்டி வருவாயா என பெரிய நடிகர்களை வைத்து நிறைய படங்களைத் தயாரிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அப்போது கூட அவர் தமிழக மக்களிடம் பெரிய அளவில் பரிட்சயம் ஆகவில்லை. கருணாநிதியோடு 2006 - 2011 கால கட்டத்தில் சினிமாவில் கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம் இருந்தது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது. அந்தச் சூழலில்தான், 2011-ல் ஆட்சி மாற்றம் வந்தது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது. 2012-ல் ஹீரோவாக அறிமுகமாகிறார் உதயநிதி ஸ்டாலின். ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவாக நடித்தார் உதயநிதி. அந்தப் படம்தான் அவரை பட்டித் தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. உதயநிதியும் சந்தானமும் சேர்ந்து அடித்த கலாட்டாவுக்கு சிரிக்காத ஆளே இருக்க முடியாது. உதயநிதியோ முதல் படமே நல்ல தொடக்கமாக  அமைந்தது; சினிமா ரசிகர்களிடையே வரவேற்பும் கிடைத்தது.

ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பதை மட்டுமே உதயநிதி கவனம் செலுத்தி வந்தார். அதன் மூலமாக, அரசியலில் ஆர்வம் இல்லாத மக்களுக்கும் பரிட்சயமான ஒரு ஆளாக மாறினார் உதயநிதி. அரசியல் வாரிசு என்பதை கடந்து ஒரு ஹீரோவாக அவரால் மக்களை கவனம் ஈர்க்க முடிந்தது. காமெடி படங்களில் நல்ல ஸ்கோர் செய்தார். அதே நேரத்தில், மனிதன், நிமிர் போன்ற படங்களின் மூலம் தனக்கு நடிப்பு வரும் என்பதை நிரூபித்துக் காட்டினார். ஆகையால், அவரின் முழு ஈடுபாடும் சினிமா மேல் இருந்தது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவார் என்பதை அரசியல் வல்லுநர்களே எதிர்பார்த்து இருந்திருக்க முடியாது என்பது நிதர்சனம். ஏனென்றால், சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவரின் அரசியல் செயல்பாடு அந்த அளவிற்குதான் இருந்தது.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஆக்டிவாக இருந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்காக திருவெறும்பூர் தொகுதியில் உதயநிதி பிரச்சாரம் செய்தார். தி.மு.க போராட்டங்களில் அவ்வப்போது பங்கேற்றுள்ளார். இதுதான் அவரின் அரசியல் செயல்பாடாக இருந்தது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு அரசியல் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் என மாற்றம் கண்டது. இந்தச் சூழலில், 2019 நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அதில்தான், உதயநிதி ஸ்டாலின் அரசியலில் தீவிரமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். 40 தொகுதிகளிலும், தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மிகத் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. 39 தொகுதியில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. அதே 2019-ல் தி.மு.க இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இது தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்பு வகித்தப் பொறுப்பாகும். கருணாநிதிக்கு அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் தன்னை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்ட பொறுப்பு அது.

அந்த அறிவிப்பை தி.மு.க கட்சியினர் கொண்டாடித் தீர்த்தனர். மறுபுறம், அ.தி.மு.க, பா.ஜ.க தரப்பில் இருந்து குடும்ப அரசியல் என கடும் விமர்சனங்கள் வந்தன. இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வந்த பிறகு, தீவிரமான அரசியலில் ஈடுபட்டார் உதயநிதி. தூத்துக்குடி ஜெயராஜ், பென்னிக்ஸ் காவலில் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்று சந்தித்தார். தி.மு.க சார்பான போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார். 2020-ம் ஆண்டில் மு.க.ஸ்டாலினை கேலி சித்தரித்து கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதற்கு எதிராக தி.மு.க சார்பில் கோவை குனியாமுத்தூரில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின்தான் தலைமை தாங்கினார். அப்போது எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி என ஆளும் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் உதயநிதி. ‘இந்த ஆட்சிக்கு இன்னும் ஆறு மாதம்தான் உள்ளது, காவல்துறை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்’ என காவல்துறையை எச்சரித்தும் பேசினார். இவை அனைத்தும் அவரின் தீவிர அரசியல் செயல்பாடுக்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.

2021 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க சார்பாக உதயநிதிக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதி தி.மு.க-வின் கோட்டை. கருணாநிதிக்கு நெருக்கமான தொகுதி ஆகும். 100 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியில் உதயநிதி நிறுத்தப்பட்டார். அந்த சட்டசபைத் தேர்தலிலும் தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமாக உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்டிய செங்கல் என்று அவர் செங்கலைக் கொண்டு பிரச்சாரம் செய்தது மக்களிடையே மிகுந்த கவனம் பெற்றது. ஒவ்வொரு தொகுதியிலும் அந்த செங்கலை எடுத்துக் காட்டினார் உதயநிதி. 2021 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க பெரிய வெற்றி பெற்றது. உதயநிதிக்கு அமைச்சரவை இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சரவை இடம் கொடுக்கப்படவில்லை. அன்பில் மகேஷ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என அவ்வப்போது குரல் கொடுத்து வந்தார்கள். இந்தச் சூழலில்தான் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது மீண்டும் அரசியல் களத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு அரசியல் என அ.தி.மு.க, பா.ஜ.க தரப்பிலிருந்து கடும் விமர்சனம் எழுந்தது. அதேவேளையில், தி.மு.க தரப்பிலிருந்து முன்பே அவருக்கு பதவி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், உதயநிதி இந்தப் பதவிக்கு தகுதியானவர் என பேசிக்கொள்கிறார்கள்.

உதயநிதி ‘ஸ்கோர்’ செய்த இடங்கள்:

சந்தானம் ஒருமுறை மேடையில் பேசும்போது, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்கும்போது வசனம் பேச அப்படி தயங்குவார்...  பல இடங்களில் அவர் சொல்ல வேண்டிய டயலாக்கை கூட என்னைதான் சொல்லச் சொன்னார். ஆனால், இப்போது அரசியலில்... பேச வேண்டிய இடத்தில் பேசுகிறார்’ என பாராட்டி சொன்னது குறிப்பிடத்தக்கது.

உதயநிதியிடம் செய்தியாளர் ஒரு கேள்வி எழுப்புகிறார் ‘புதிதாக கட்சி தொடங்கும் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆட்சி தருவோம் என சொல்கிறார்கள். ஏன் கலைஞர் ஆட்சி தருவோம் என சொல்வதில்லை’ என கேள்வி எழுப்பினார். உதயநிதியோ சற்றும் யோசிக்காமல் ‘ஏனென்றால் கலைஞர் ஆட்சியல் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும்’ என பதில் கொடுத்தார்.

இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் விளக்கப் பாசறை என கட்சிக் கொள்கையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தொடர் கூட்டங்கள் நடத்தியுள்ளார். கடந்த ஜூலை மாதம் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்தது. குறைந்த காலத்தில் இதற்கான தயாரிப்புகளை செய்ய வேண்டி இருந்தது. இந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் உதயநிதி. இந்தப் போட்டியின் தொடக்க விழா தொடங்கி நிறைவு விழா வரையில் இருந்த பிரம்மாண்டம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 2,000 ஆண்டுகால தமிழ் வரலாற்றை விளக்கும் கலை நிகழ்ச்சிகள் என தமிழ்நாடு இதுவரை பார்க்காத பிரம்மாண்டமாக அந்த விழா அமைந்தது. அரசியல் களத்தில் உதயநிதி ‘ஸ்கோர்’ செய்த முக்கியமான இடமாக அந்த நிகழ்ச்சி அமைந்தது.

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி முன்னிருக்கும் சவால்கள்:

அமைச்சரான உதயநிதிக்கு ஏற்படப் போகும் நெருக்கடி தனது தாத்தா கருணாநிதியிடமிருந்து தொடங்குகிறது. எம்.எல்.ஏ என்பது மக்கள் பிரதிநிதி என்ற அளவில் முடிந்துவிடும். ஆனால், அமைச்சர் என்பது அரசியல் சாசன பதவி. 1971-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தி.மு.க வெற்றி பெற்ற பிறகு, எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் நேரடியாக கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கேட்டதாகவும், அதற்கு நடிப்பை விட்டால்தான் அமைச்சர் பதவி வழங்க முடியும் என்று கருணாநிதி மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அப்படியிருக்கும்போது, அமைச்சரான பிறகும் உதயநிதி நடிப்பைத் தொடர்ந்தால் அது பெரிய விமர்சனங்களை உருவாக்கும். மாமன்னன்தான் கடைசிப்படம் என்று உதயநிதி கூறிவருகிறார். இருந்தாலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் படங்களை வெளியிடுவதும் விமர்சனத்துக்கு உள்ளாகும் சூழல் உள்ளது.

விமர்சனங்கள்:

இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் வாரிசு அரசியல் என்கிற விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியில் தொடங்கி பல கட்சிகள் பட்டியலில் வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க வாரிசு அரசியல் விமர்சனத்தை கடுமையாக எதிர்கொண்டு வருகிறது. தற்போது மட்டுமின்றி சுமார் 40 வருடங்களுக்கு முன்பு இருந்தே இந்த விவகாரம் இருந்து வருகிறது. 2006 - 2011 காலகட்டத்தில் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது அவரது மகன்கள் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, அழகிரிக்கு மத்திய அமைச்சர் பதவி, மகள் கனிமொழிக்கு எம்.பி. பதவி வகித்த நிலையில், பேரன்கள் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவீஸ், தயாநிதி அழகிரி Cloud Nine Movies, அருள்நிதி படங்களில் ஹீரோ என திரைப்படத்துறையிலும் திமுக குடும்பத்தினர் பட்டியல் நீண்டததால், அரசியல் மட்டுமல்லாது சினிமாவிலும் குடும்ப ஆதிக்கம் இருப்பதாக  கருணாநிதி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருப்பினும், மு.க.ஸ்டாலின் அரசியல் வருகையை யாரும் பெரிதாக வாரிசு அரசியல் என விமர்சிக்கவில்லை. ஏனென்றால், கட்சியில் அடிமட்டத்தில் இருந்து தனது செயல்பாட்டைத் தொடங்கினார் ஸ்டாலின். 70களில் மிசா சட்டத்தில் சிறைக்குச் சென்றது. அதற்கு முன்பே மாணவர் அணி என கட்சியில் அவரின் செயல்பாடு தீவிரமாக இருந்தது. தி.மு.க-வை தீவிரமாக விமர்சனம் செய்யும் சோ, ஸ்டாலினை வாரிசு அரசியல் என குறிப்பிட்டதில்லை. பா.ஜ.க-வின் அண்ணாமலையும் கூட ஸ்டாலின் படிப்படியாக வந்தவர் அவரை வாரிசு அரசியல் என குறிப்பிட முடியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், உதயநிதியை அவ்வப்போது வாரிசு அரசியல் என அவர் குறிப்பிடுவார். அதேபோல் அவருக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

First published:

Tags: DMK, MK Stalin, Udhayanidhi Stalin