• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயலலிதா - சசிகலா தோழிகளானது எப்படி?

ஜெயலலிதா - சசிகலா தோழிகளானது எப்படி?

சசிகலா - ஜெயலலிதா

சசிகலா - ஜெயலலிதா

எனது உடன்பிறவா சகோதரி சசிகலா என்றும் அவர் எப்போதும் தன்னோடுதான் இருப்பார், அவரைப் பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது என ஜெயலலிதா அறிவித்தார்

  • Share this:
    ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சையில் இருந்தபோது அவரது அறையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் அல்லாத ஒரே நபர் சசிகலா தான். 

    ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகமானது 1984-ம் ஆண்டில்தான். கடலூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த தனது கணவர் நடராஜன் மூலம் ஆட்சியர் சந்திரலேகாவின் தொடர்பை பிடித்து, சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவின் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றை வீடியோ எடுக்கும் பணி கோரி அமுகமானார் சசிகலா.

    சென்னையில் உள்ள தனது கடையில் இருந்து வீடியோ கேசட்களை ஜெயலலிதாவுக்கு வழங்கி தொடர்பை வலுப்படுத்திக்கொண்டார். நாளடைவில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கே வந்து சசிகலா தங்கும் அளவுக்கு நட்பு வளர்ந்தது. ஜெயலலிதாவின் உடல்நலம், கட்சிப் பணிகள் உள்ளிட்டவற்றை அவருடனே பயணம் செய்து கவனித்து வந்தார் சசிகலா.

    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக பிளவுபட்டிருந்தபோது அரசியல் நெருக்கடிகளை ஜெயலலிதா சந்திக்க வேண்டியிருந்தது.அப்போது எல்லாம் ஜெயலலிதாவுடன் பக்கபலமாக இருந்ததும் சசிகலாவும், குடும்பத்தினரும்தான். அதிமுக அணிகள் இணைந்ததும் 1991 தேர்தலில் வென்று தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா.

    அப்போது சசிகலாவுடன் அவரது உறவினர்கள் சிலரும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாகினர். அதன்பிறகே போயஸ் கார்டனில் சசிகலாவின் உறவினர்கள் தென்படத் தொடங்கினர்.  இதன் தொடர்ச்சியாகவே சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தத்தெடுத்தார் ஜெயலலிதா. சசிகலாவின் சகோதரர் ஜெயராமன் விபத்து ஒன்றில் உயிரிழந்தவுடன் அவரது மனைவி இளவரசி மற்றும் கைக்குழந்தையை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து வந்தார்.

    அக்குழந்தைதான் பின்னாளில் போயஸ் இல்லத்தில் அதிகாரம் செலுத்திய விவேக் ஜெயராமன்.ஜெயலலிதாவோடு இணைந்து சசிகலா ஆடம்பர வாழ்க்கையை மட்டுமின்றி நெருக்கடி கால சங்கடங்களையும் பகிர்ந்துகொண்டவர். குறிப்பாக 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சோதனையான காலம், வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம், பல்வேறு ஊழல் புகார்களால் தேர்தலில் தோல்வி கண்டார் ஜெயலலிதா.

    சசிகலாவின் தொடர்புதான் ஜெயலலிதாவின் சரிவுக்கு காரணம் என்றும் ஆட்சியில் தலையீடு புகார்கள் முதல் வளர்ப்புமகன் திருமணம் வரை எல்லாவற்றுக்கும் சசிகலாவே காரணம் என்றும் பேச்சு எழுந்தது. சசிகலாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால் அது அதிக காலம் நீடிக்கவில்லை. எனது உடன்பிறவா சகோதரி சசிகலா என்றும் அவர் எப்போதும் தன்னோடுதான் இருப்பார், அவரைப் பற்றிய எந்த கேள்வியும் அவசியமற்றது என ஜெயலலிதா அறிவித்தார்.அதன் பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவின் தலையீடு முன்னிலும் மேலோங்கியது.

    சசிகலாவை சின்னம்மா என தொண்டர்கள் அழைக்கத்தொடங்கினர். ஒருபுறம் ஜெயலலிதாவின் நிழலாக இயங்கிய போதும், மறுபுறம் சசிகலாவின் உறவினர்களை அவ்வப்போது ஜெயலலிதா தண்டிக்க தவறவில்லை  சசிகலாவின் கணவர் நடராசனை ஒதுக்கி வைத்த ஜெயலலிதா, அவர் மீது பல்வேறு வழக்குகளை போட்டு கைது செய்தார். அப்போதும் எந்த சலனமும் இல்லாமல் ஜெயலலிதாவோடு இருந்தார் சசிகலா.

    2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்தது. நிர்வாகத்தில் மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்தவர்களை சசிகலா கொண்டுவந்தார். இதனால் அதிர்ந்து போன் ஜெயலலிதா மீண்டும் சசிகலாவை வெளியேற்றினார். சசிகலாவுடனும், அவரது குடும்பத்தினரிடமும் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என பகிரங்கமாகவே எச்சரித்தார்.

    இத்தனை நடந்த போதும் சசிகலா எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. தான் சார்ந்த யாரையும் எதிர் வினையாற்ற அனுமதிக்கவில்லை. இந்த பிரிவும் சில மாதங்களே நீடித்தது. மீண்டும் போயஸ் கார்டன் வந்தார் சசி. ஜெயலலிதாவை கவனித்துக்கொள்ள சசிகலாவால் தான் முடியும். அவர் இல்லாமல் ஜெயலலிதாவால் தனித்து இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு சசிகலா ஜெயலலிதாவுடன் ஐக்கியமானார்.

    மீண்டும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் சிறை சென்றனர்.  2016-ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜெயலிதாவை 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொண்டவர் சசிகலா தான். ஜெயலலிதா மறையும் வரை 32 ஆண்டுகள் அவரது நிழலாகவே வாழ்ந்தவர் என்றால் மிகையாகாது.

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: