தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை புறவழிச் சாலை அருகே, பிப்ரவரி 1ஆம் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. தலை மற்றும் வயிற்றில் லாரி ஏறி நசுங்கிய நிலையில் நிர்வாணமாக கிடந்த சடலத்தை மீட்ட தருமபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர். இறந்து கிடந்தவர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 42 வயதான சுரேஷ்குமார் என்பது உறுதியானது, தொடர் விசாரணையில் கொலைக்கான காரணமும் தெரியவந்தது.
லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் செய்துவந்த சுரேஷ்குமாரும் கிருஷ்ணமூர்த்தியும் நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தியின் மகன் 23 வயதான அரவிந்த்குமார் வேலைக்கு செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு, கிருஷ்ணமூர்த்தி தனது நண்பரான சுரேஷ்குமாரிடம் மகனுக்கு புதிய தொழில் தொடங்க உதவி கேட்டுள்ளார்.
சம்மதம் தெரிவித்த சுரேஷ்குமார், வங்கி மற்றும் தனியார் நிதிநிறுவனங்களில் தனது பெயரில் கடன் பெற்று நான்கு லாரிகளை வாங்கி அரவிந்திற்கு கொடுத்துள்ளார். சுரேஷ் பெற்றுக் கொடுத்த கடனுக்கு ஓராண்டு முறையாக தவணை கட்டி வந்த அரவிந்த், கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்து பணம் கட்டாமல் இருந்துள்ளார்.
இதனால் வங்கி அதிகாரிகள் சுரேஷ்குமாரை நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் அரவிந்தின் தந்தையும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அரவிந்திடம் வங்கியின் கடனை உடனே அடைக்கும்படி சுரேஷ் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் வங்கிக் கடனை தன்னால் அடைக்க முடியாது என்று உணர்ந்த அரவிந்த் , வங்கிக் கடன் சுரேஷ் பெயரில் உள்ளதால் அவரை தீர்த்துக் கட்டிவிட்டால் லாரிகள் தனக்கு சொந்தமாகிவிடும்; கடன்தொல்லையும் இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
அதேபகுதியை சேர்ந்த தனது நண்பர்களான 21 வயதான எல்லப்பராஜ், 28 வயதான கோவிந்தராஜ், 25 வயதான கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து மூன்று மாதங்களாக திட்டம் போட்டுள்ளார். அரவிந்த், எல்லப்பன், கோவிந்தராஜ் ஆகியோர், சுரேஷ்குமாரை கடந்த 1 ஆம்தேதி மது அருந்த காரில் அழைத்து சென்றுள்ளனர்.
மதுபோதையில் பல்வேறு இடங்களுக்கு சுற்றியவர்கள் சுரேஷை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துள்ளனர். அதியமான்கோட்டை புறவழிச் சாலை அருகே காரை நிறுத்தி மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்கனவே திட்டம்போட்டபடி தங்களது மற்றொரு நண்பரான கார்த்திக்கை வைத்து சுரேஷ்குமார் மீது லாரியை விட்டு மோத செய்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சுரேஷ்குமாரை அடையாளம் தெரியாமல் இருக்க ஆடைகளை கழற்றி, மீண்டும் சாலையில் தள்ளி அவர் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். சம்பவத்தன்று சுரேஷ்குமாரின் செல்போன் அழைப்புகள், அவர் கடைசியாக யாருடன் சென்றார் ஆகிய தகவல்களின் அடிப்படையில் கொலைகாரக் கும்பல் சிக்கியது என்கின்றனர் போலீசார்.
மேலும் படிக்க... தெலுங்கானா: ஏடிஎம் மெஷினையே கடத்திய கொள்ளையர்கள்... சிசிடிவி வீடியோ
கொலையில் தொடர்புடைய அரவிந்த், கார்த்திக், கோவிந்தராஜ், எல்லப்பராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனக்காக உதவி செய்த அப்பாவின் நண்பரை, இளைஞரும் அவரது நண்பர்களும் லாரி ஏற்றிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.