ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓய்வூதியம் கேட்டு அலையும் 97 வயது சுதந்திரப் போராட்ட தியாகி!

ஓய்வூதியம் கேட்டு அலையும் 97 வயது சுதந்திரப் போராட்ட தியாகி!

News18

News18

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் 97 வயதில் ஓய்வூதியம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார். ஓய்வூதியம் தராவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள ஏலகிரியை சேர்ந்தவர் நாராயணசாமி. 1923ம் ஆண்டு பிறந்த இவர், தனது பள்ளி பருவத்திலேயே மகாத்மா காந்தியுடன் இணைந்து "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் பங்கேற்றவர். பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு ரத்தம் சிந்தியதுடன், வேலூர் மத்திய சிறையில் சிறைவாசமும் அனுபவித்தவர்.

  நாட்டின் விடுதலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த நாராயணசாமி, வறுமை காரணமாக சுந்தந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் கோரி கடந்த 2005ம் ஆண்டில் விண்ணப்பித்தார். இந்த மனுவை அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் ஓய்வுதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓய்வூதியம் கேட்டு நடையாய் நடந்தபோது விபத்தில் சிக்கி வலது கால் முறிந்தது. அதனால் நடமாடுவதற்கு கூட சிரமப்பட்டு வருகிறார்.

  7 மகன், மகள்களுடன் கூட்டுக் குடும்பமாக குடிசையில் வசித்து வரும் நாராயணசாமி, தனக்கு வீடு கட்டித் தரும்படியும், பேரப்பிள்ளைகளுக்கு வேலை வழங்கி வறுமையில் இருந்து குடும்பத்தை மீட்க அரசு உதவ வேண்டும் என்றும் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

  தனது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் 26ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் நாராயணசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறை சென்ற தியாகி, தள்ளாத வயதிலும் ஓய்வூதியம் கேட்டு அலைக்கழிப்படுவதற்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

  Published by:Sankar
  First published:

  Tags: Tirupattur