பேருந்தில் மகளிருக்கு இலவசம்.. ஆண்களுக்கு கூடுதல் கட்டணமா? திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம்.. இழப்பை ஈடுசெய்ய புதிய உத்தியை கையாள்வதா? ஓபிஎஸ் கண்டனம்

மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல் என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வதற்கான அறிவிப்பு முதல்வரால் வெளியிடப்பட்டது.

  இந்த அறிவிப்பின்படி, நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சில பகுதிகளில், பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்ய பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்சக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும், இதற்கு முன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்சக் கட்டணமாக இருந்தது என்றும், சட்டத்துக்குப் புறம்பாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்றும், இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

  Also read:  3வது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

  மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்துக்கு ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மகளிருக்கான இலவசப் பயணத்தால் ஏற்படும் இழப்பு ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: