திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சி கதிரவன் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதியை எதிர்த்து போட்டியிடுகிறார். மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட குணசீலம், ஆம்பூர், பெரிய கொடுந்துறை, சின்ன கொடுந்துறை, வீரமணி பட்டி, தொட்டியப்பட்டி, மங்கலம், பேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்கும் போது ஒரு சிறுமி ஆரத்தி எடுத்து திமுக வேட்பாளர் கதிரவனுக்கு பொட்டு வைத்தாள். அதனைத் தொடர்ந்து பெண்கள் ஏராளமானோர் ஆரத்தி எடுத்தனர். அதன் பின்னர் அந்த பகுதியில் அவர் பேசினார். அப்போது,
“மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினையை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு வருட காலத்திற்குள் நிறைவு செய்வோம்.
இலவசமாக தொகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவம் பார்க்கப்படும். சமயபுரம் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவதால் நடை பாதை அமைக்கப்படும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் விவசாயம் அதிகம் நிறைந்த பகுதியாக இருப்பதால் காவிரியிலிருந்து தங்குதடையின்றி நீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்வோம்” என வாக்குறுதி அளித்தார்.