50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு - மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
செந்தில்பாலாஜி
Senthil Balaji : தமிழகத்தில் 1,649 கோடியில் ரூபாயில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தொழில்துறை, மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி, தனது பதிலுரையில் நாட்டில் பல மாநிலங்களில் மின்வெட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார். நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், முதலமைச்சரின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. என்று தெரிவித்துள்ளார். நலிவடைந்த மின் உற்பத்தி நிலையங்களை குறைந்த விலையில் வாங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறைவான திறன் உடைய மின் நிலையங்கள் அதிக திறனுள்ள மின் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள், சாலையோர துணை மின் நிலையங்களில் நிறுவப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.1,649 கோடியில் ரூபாயில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்றும் டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைக்கப்படும் என்றும் தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் சொல்லவில்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மதுவிலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் இதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் 5,350 டாஸ்மாக் கடைகள் உள்ளதாகவும், புதிய டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். மக்களின் எதிர்ப்பால் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் தான் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில், மதுபானங்கள் மூலம் 36 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏப்ரல் முதல் மாதத் தொகுப்பூதியம் 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழ்நாட்டில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.