• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரதமர், முதலமைச்சர், கவர்னர் அலுவலக முத்திரைகளை பயன்படுத்தி எம்.பி எம் எல் ஏ., சீட் வாங்கித் தருவதாக மோசடி..

பிரதமர், முதலமைச்சர், கவர்னர் அலுவலக முத்திரைகளை பயன்படுத்தி எம்.பி எம் எல் ஏ., சீட் வாங்கித் தருவதாக மோசடி..

ஓம் - மகாதேவைய்யா

ஓம் - மகாதேவைய்யா

இந்தியா முழுவதும் எத்தனை நபர்களை இந்த கும்பல் ஏமாற்றி அதன் மூலம் எவ்வளவு கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Share this:
பிரதமர், முதலைமச்சர்கள், கவர்னர்கள் அலுவலக முத்திரை, அதிகாரிகளின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி அதன் மூலம் எம்.பி., எம்.எல்.ஏ. சீட், பல்கலைகழக துணை வேந்தர் பதவி, பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் வாங்கி கொடுப்பதாக தமிழகத்தில் 100 கோடிக்கும் மேல் மோசடி செய்த தந்தை மகன் உட்பட மூவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல அரசு பல்கலைக்கழகத்தில் பிசிக்கல் டைரக்டராக இருந்து வரும் செந்தில்குமார் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கவர்னர் மாளிகைக்கு நேரில் சென்று அண்ணாமலை பல்கலைகழகத்தில் துணைவேந்தராக தன்னை  எப்போது நியமனம் செய்வீர்கள்? என கேட்டபோது கவர்னர் மாளிகையே அதிர்ச்சியுற்று நின்றது.
கவர்னர் மாளிகை அதிகாரிகள் விசாரணை செய்தபோது கவர்னர் மாளிகையில் மகாதேவய்யா என்பவர் கவர்னர் தனக்கு நெருக்கம் என்பதால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னிடமிருந்து ரூபாய் 1.5 கோடி ரூபாய் பணம் வாங்கியதாகவும், மேலும் கவர்னர் அலுவலகத்தில் இருந்து தனக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணி நியமனம் செய்திருப்பதாக மெயில் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதிகாரிகள் மெயிலை சோதனை செய்து பார்த்தபோது அந்த மெயில் போலியாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் அதில் அனுப்பப்பட்ட தகவலானது அச்சு அசலாக கவர்னர் மாளிகை அலுவலக முத்திரை மற்றும் அதிகாரிகளின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கவர்னர் மாளிகை அலுவலக அதிகாரிகள் அப்போதே டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவிட்டதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் மோசடி செய்து தலைமறைவாக இருந்த பெங்களூரைச் சேர்ந்த மகாதேவய்யா(54) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தண்டனை பெற்று சிறையில் இருந்த மகாதேவய்யா கொரோனா காலத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் வடபழனி சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவர் ரூபாய் ஒன்றரை கோடி பணம் வாங்கிக் கொண்டு தனக்கு எம்பி சீட் வாங்கித் தருவதாக கூறி தன்னை ஒரு கும்பல் ஏமாற்றியதாக சிபிசிஐடி அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் சிறையில் இருந்து வெளியே வந்த மகாதேவய்யா தான் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் என்பவரையும் ஏமாற்றி உள்ளது என்பதை கண்டறிந்தனர்.

தலைமறைவாக இருந்த மோசடி கும்பலை பிடிப்பதற்கு உதவி ஆணையர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மோசடி கும்பல் மைசூரில் தலைமறைவாக இருப்பதை அறிந்த சிபிசிஐடி தனிப்படை போலீசார் அங்கு சென்று மோசடியில் ஈடுபட்ட மகாதேவய்யா(54), அவரது மகன் அங்கித்(29) மற்றும் இவர்களது நண்பரான ஒசூரைச் சேர்ந்த ஓம்(34) ஆகிய மூவரை கைது செய்தனர்.

போலீசார்கள் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்திய பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல மாநில கவர்னர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் என்பது போல் காட்டிக்கொண்டு எம்பி, எம்.எல்.ஏ., சீட் வாங்கி தருவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி, சாலை ஒப்பந்தம் போன்ற பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை நேரடியாக பெற்றுத் தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரியவந்தது.

ஒவ்வொரு நபர்களிடமிருந்து ரூபாய் 1.5 கோடி முதல் ரூபாய் 10 கோடி வரை மோசடி செய்திருப்பதும் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கும் மேல் இவர்கள் மோசடி செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதே பாணியில் இவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் பணக்காரர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மகாதேவய்யாவின் மகனும் ME பட்டதாரியான அங்கித் என்பவர் பிரதமர் அலுவலகம், பல மாநில முதலமைச்சர் அலுவலகம், பல மாநிலங்கள் கவர்னர் அலுவலக முத்திரைகள் மற்றும் அதிகாரிகளின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி, போலி அரசு நியமன ஆணைகளை உருவாக்கி மெயில் மூலம் அனுப்பி வந்ததும் தெரியவந்தது.

ஓசூரைச் சேர்ந்த ஓம் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மகாதேவய்யா பெங்களூரில் பெரும் பணக்காரர் என்பதால் இவர் மீது பெங்களூர் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவில்லை இதனால் பெங்களூரிலிருந்து மோசடிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கி போலி சான்றிதழ்களை உருவாக்கியதும் தெரியவந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெங்களூர், மைசூர் போன்ற பகுதிகளில் மகாதேவய்யா மூன்று வீடுகளை வாங்கியுள்ளார். அதேபோல அவரது மகன் அங்கித் மூன்று வீடுகள் மற்றும் பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியுள்ளார் என்பதாலும் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு ரூ.250 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புகள் உள்ளதாலும் மோசடி செய்த பணத்தில் இவர்கள் சொத்துகள் வீடுகள் வாங்கி இருக்கலாம் என சிபிசிஐடி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் தற்போது வரை இவர்கள் மீது பிரபல அரசு பல்கலைக்கழக பிசிக்கல் டைரக்டர் செந்தில்குமார் மற்றும் சென்னை வடபழனியைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான ஜெபா ஜோன்ஸ் ஆகிய இருவர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். ஆனால் இவர்களால் 50க்கும் மேற்பட்ட நபர்கள் தமிழகத்தில் மட்டுமே ஏமாற்றப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் வேறு என்னென்ன மோசடிகளில் ஈடுபட்டு உள்ளனர்? இந்தியா முழுவதும் எத்தனை நபர்களை இவர்கள் ஏமாற்றி அதன் மூலம் எவ்வளவு கோடி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: