உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார் - வாழ்க்கை குறிப்பு

நீதிபதி லட்சுமணன்

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டையில் 1942 - ஆம் ஆண்டு பிறந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று, சாதாரண வழக்கறிஞராக தனது வாழ்கையை தொடங்கினார்.

  நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர், தமிழக அரசு வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடியவர். 1990- ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக்கப்பட்டார். பின்னர் கேரளா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார்.

  அப்போது அங்கு தேங்கிக் கிடந்த ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு விரைவாகத் தீர்ப்பெழுத வைத்தார். பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றத்தில் இவர் பிறப்பித்த உத்தரவுதான் பிற்பாடு இந்திய அளவில் நடைமுறைக்கு வந்தது.

  குருவாயூர் கோயிலுக்கு யானையைத் தானமாக கொடுப்பவர்கள் அவற்றின் பராமரிப்புச் செலவுகளுக்காக ஒரு லட்ச ரூபாய் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்' என்று அதிரடி உத்தரவையும் பிறப்பித்தார்.

  1999-ல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த மருத்துவ மாணவர் ஒருவர் தனக்கு உடல் நிலை சரியில்லாததால், தேர்வு எழுத தனக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்க வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்தக் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்ட ஏ.ஆர்.லட்சுமணன், அந்த மாணவனுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்க தொலைபேசி வாயிலாக ஆணை பிறப்பித்தார். .

  முல்லைப் பெரியாறு அணை தீர்வுக்காக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் , தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இக்குழுவினர் அளித்த அறிக்கைகையே முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் கோரியபடி 142 அடிக்கு நீரை தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவிற்கு அடிப்படையாக அமைந்தது.

  இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தவர். பல நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதி லட்சுமணன், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்திற்கும் கூடுதலான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

  லட்சுமணனின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது மனைவி இறந்த இரண்டே நாள்களில் லட்சுமணனும் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
  Published by:Sankaravadivoo G
  First published: