ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரும் 31ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரும் 31ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை

நளினி விடுதலை

நளினி விடுதலை

விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரும் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமிற்கு செல்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.

  இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், பேரறிவாளனின் நன்னடத்தை குறித்து, பரோலில் வெளிவந்தபோதும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டதாக மேற்கோள் காட்டியுள்ளது. தாங்களும் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.

  இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிறையில் இருந்துவரும், 6 பேரின் நன்னடத்தை குறித்து தமிழக அரசும், மனுதாரர்கள் தரப்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

  இதையும் படிங்க: தமிழக அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை பாஜக நிரப்ப வேண்டும்: அமித்ஷா விருப்பம்!

  இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் பேரறிவாளன் வரவேற்றார்.

  மேலும் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினி விடுவிக்கப்பட்டார். முருகன், சாந்தன் , ரவிச்சந்திரன் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் சிறை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

  விடுதலை

  இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரும் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமிற்கு காவல்துறையினர் தங்களது வாகனத்தில் பாதுகாப்பாக அழைத்து செல்லவுள்ளனர்.

  Published by:Arunkumar A
  First published: