‘நேர்மையா வாழ்ந்து அப்படி என்ன சம்பாதிச்சனு கேக்குறங்களுக்கு இதுதான் பதில்’ - முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன்

‘நேர்மையா வாழ்ந்து அப்படி என்ன சம்பாதிச்சனு கேக்குறங்களுக்கு இதுதான் பதில்’ - முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன்

நன்மாறன்

‘நேர்மையா வாழ்ந்து அப்படி என்ன சம்பாதிச்சனு கேக்குறவங்களுக்கு இது தான் பதில்’: வாடகை வீட்டில் குடியிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் சொன்னது என்ன தெரியுமா?

  • Share this:
தான் மட்டும் உத்தமன் இல்லை என்று உத்தமர்களால் மட்டுமே சொல்ல முடியும். அரசியலில் அடிமட்ட அதிகாரம் கிடைத்தாலே எப்படியெல்லாமோ வாழ்பவர்களுக்கு மத்தியில், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் வாடகை வீட்டில் குடியிருக்கிறார் நன்மாறன்.

அவர் 'நன்' மாறனாகவே வாழ்ந்தது எப்படி?

2001 மற்றும் 2006 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வென்று மதுரை கிழக்கு தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு சென்றார் நன்மாறன். மக்கள் பணியையும், கட்சிப் பணியையும் இரு கண்ணென கொண்டவர் மக்களுக்கு பணி செய்ததற்காக அரசு கொடுத்த சம்பளத்தையும் விதிப்படி கட்சிக்கே கொடுத்தார். பின்னர், அரசு அளிக்கும் 20 ஆயிரம் ரூபாய் எம்.எல்.ஏ ஓய்வூதியத்தையும் கட்சிக்கே கொடுத்து விட்டு, கட்சி அளிக்கும் 12 ஆயிரம் ரூபாய் சொற்ப பணத்தில் வாழ்ந்து வருகிறார். மதுரை ஆரப்பாளையம் பொன்னகரம் பகுதியில் ஒரு காம்பவுண்டு மாடி வீட்டில் 6000 ரூபாய் வாடகைக்கு வசித்து வருகிறார்.

அவரின் இரு மகன்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும், தன் காலத்திற்குப் பிறகு தன் மனைவி வள்ளிக்கு வசிப்பிடம் வேண்டும் என்பதற்காகவும் பிப்ரவரி 15ம் தேதி மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுவோடு வந்தார்.

ராஜாக்கூர் பகுதியில் ஏழைகளுக்காக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டில், தனக்கும் ஒரு வீடு ஒதுக்கித் தரும்படி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதனால் இப்போது மீண்டும் அவரது நேர்மை பேசுபொருளாக மாறியிருக்கிறது.



"மனைவி பெயரில் வீடு ஒத்துக்கித் தரும்படி கோரிக்கை வைத்துள்ளேன். திங்கள் கிழமை குறை தீர்க்கும் நாளில் ஆட்சியர் இருப்பார் என நினைத்து வந்தேன். ஆனால், அவர் இல்லை. எனவே டி ஆர் ஓவிடம் கொடுத்துள்ளேன். அது ஊடகங்களில் வந்த செய்திகள் மூலமாக தலைமை செயலகம் வரை சென்றிருக்கும் என நம்புகிறேன்" என்றார்.

காவல் அதிகாரி வேலை கிடைத்தும், சமூகம் குறித்த தனது சிந்தனையால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதாக கூறும் அவர், தான் மட்டும் உத்தமன் இல்லை என்கிறார்.

"கட்சியில் எல்லோருக்கும் ஒரே விதி தான். கட்சி கொடுப்பதை மட்டும் பெற்றுக் கொள்வேன். அங்கு என்னைப் போல பல உத்தமர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சில விதி விலக்குகள் உண்டு. அதையே விதியாக மாற்றிக் கொள்ளக் கூடாது. விதிப்படி தான் நடக்க வேண்டும்" என தெரிவித்தார்.

தற்போது 72 வயதிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், சிறுபான்மை மக்கள் நல குழுவில் மாநில பொறுப்புகளில் அயராமல் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவரிடம், இத்தனை ஆண்டு கால அரசியல், மக்கள் பணியில் நீங்கள் பெற்றது என்ன என்று கேட்டோம்.

அதற்கு, "சமூகத்துக்கு பயன்பட்டுள்ளேன். அது போதும். பதிலுக்கு, சமூகம் எனக்கு பயன்பட வேண்டும் என நான் நினைத்ததில்லை. இப்போது நாடு சிரமமான நிலையில் இருக்கிறது. அதற்காக பணியாற்ற வேண்டும் என நினைக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தமிழகத்தில் ரூ. 31,500 கோடி மதிப்பிலான பெட்ரோலியத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

சமூகத்திற்கு பயன்பட்டால் போதும் என்ற திருப்தியில் வாழும் நன்மாறன், அவருக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அவரது மனைவிக்கு பயன்படுவதற்காக ஒரு சிறு கோரிக்கையை முதன்முதலாக முன்வைத்திருக்கிறார். அதை அரசு உடனே நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் நேர்மையின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.





உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: