மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன் (72) நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் நன் மதிப்பிற்குரியவர். மக்களிடம் நேர்மையான, எளிமையான அரசியல்வாதி என்ற பெயரையும், கட்சியினரிடையே கடின உழைப்பாளி, உண்மையான சமூக சிந்தனையாளர் என்ற பெயரையும், இலக்கியவாதிகளிடம் மேடைக் கலைவாணர் என்ற பெயரையும் பெற்றவர்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த வாய்ப்பை, மதுரை மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஐ.டி.பார்க், டைடல் பார்க் வரை மதுரைக்கு கொண்டு வரவும் பயன்படுத்திக் கொண்டவர். மதுரையில் உயர் நீதிமன்ற கிளை உருவாக தன் பங்களிப்பை செலுத்தி இருக்கிறார். இன்றும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கரை படியாத கைகளுக்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவருடைய அலுவலகம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாள்களிலும் திறந்தே இருக்கும்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மீது கொண்ட பற்றால் அவர்களின் வரலாறுகளை புத்தகமாக எழுதி இருக்கிறார். தமுஎகசவில் மதுரைக் கிளை உறுப்பினராகவும், மாநிலக் குழு, மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றி, மாநில துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.