அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக
எடப்பாடி பழனிசாமியும் இருந்து கட்சியை வழிநடத்திவருகின்றனர். இந்தநிலையில், வரும் ஜூன் 23-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் சர்ச்சையாக எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அருகேயும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், கட்சிக்குள் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. எனவே, எடப்பாடி பழனிசாமிக்கே தலைமைப் பொறுப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. அதனால், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தநிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தீர்மானம் தயாரிக்கும் குழு இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், வளர்மதி உள்ளிட்டரும் பொன்னையன், செம்மலை, வைகைச் செல்வன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வருகை தருவதாக இருந்தது. அதனையடுத்து, இவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ‘வரும் 18 தேதி ஆலோசனைக் கூட்டம் மறுபடியும் நடக்க உள்ளது. ஓ.பன்னீர் செல்வம் வருகிறார் என்பதால் இந்த கூட்டம் முடிந்து செல்கிறோம் என்ற கருத்து தவறானது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பேசப்பட்ட ஒற்றைத் தலைமையை பற்றி அனைவரும் கருத்து தெரிவிக்கிறார்கள். அது செயல் வடிவம் பெறலாம், பெறாமலும் போகலாம். பொதுக்குழு ஒத்தி வைப்பதற்கான பேச்சுக்கு இடமில்லை. திட்டமிட்டபடி நடைபெறும். அனைத்தும் பிரச்சினையும் சுமுகமாக முடியும் என நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.