18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையிலேயே தடுப்பூசி : சுகாதாரத்துறை செயலர் தகவல்

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழக அரசு தனது நிதியில் இருந்தே 1.5 கோடி டோஸ் வேண்டுமென இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த மாதம் இறுதியில் கடிதம் எழுதியிருந்தது.

  • Share this:
தமிழகத்தில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வியாழக்கிழமை  திருப்பூரில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி விநியோகம், முன்னுரிமை அடிப்படையிலேயே செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாது, உலக அளவில் 5 கோடி தடுப்பூசி உற்பத்திக்கான டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது நிதியில் இருந்தே 1.5 கோடி டோஸ் வேண்டுமென இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த மாதம் இறுதியில் கடிதம் எழுதியிருந்தது. இருப்பினும் அதில் 13.85 லட்சம் டோஸ்களுக்கான ஆர்டர் அனுமதியை மட்டுமே இந்த மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவி ஷீல்ட் தடுப்பூசி 11 லட்சத்து 18 ஆயிரத்து 530 டோஸ்களும், கோவேக்சின் தடுப்பூசி 2 லட்சத்து 66 ஆயிரத்து, 530 டோஸ்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

Also Read: கருப்புப் பூஞ்சை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்... மருத்துவமனையில் மருந்து கிடைக்க வழி செய்யுங்கள் - அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

இதில் 9 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் இது வரை வந்துள்ளன. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 470 டோஸ் கோவிஷீல்டும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 530 டோஸ் கோவாக்சினும் வந்து சேர்ந்துள்ளன.

இன்னமும் இரண்டு தடுப்பூசிகளிலும் 4 லட்சத்து 23 ஆயிரத்து 60 தடுப்பூசி டோஸ்கள் வந்து சேர வேண்டியுள்ளன.அதே சமயம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் தடுப்பூசிக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவமனைகளை அணுகும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பது இல்லை. இந்த நிலையில்தான், முன்னுரிமை அடிப்படையிலேயே தடுப்பூசி டோஸ் விநியோகிக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள்,  முக்கிய தொழிலகங்களின் தொழிலாளர்கள் என கொரோனா பரவல் ஆபத்து அதிகமுள்ள பிரிவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தவுள்ளது. தமிழகம் கேட்ட 1.5 கோடி டோஸ்களில் மீதமுள்ளவற்றுக்கு ஆர்டர் வழங்க மத்திய அரசிடம் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
Published by:Ramprasath H
First published: