தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் முதல்முறையாக புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கம்பிவேலி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே முடீஸ் வனப்பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி உடலில் காயங்களுடன் புலிக்குட்டி ஒன்று மீட்கப்பட்டது. 8 மாதமே ஆன அந்த புலிக்குட்டியின் உடலில் முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி இருந்த நிலையில், தனி கூண்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்பொழுது ஓன்றரை வயதான (16 மாதம்) அந்த புலி குட்டி ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறது. அதன் உடல் எடையும் 118 கிலோவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்த புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்க கோவை மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
வழக்கமாக புலிக்குட்டிகள் தாயுடன் இருக்கும் பொழுது வேட்டையாட கற்றுக் கொள்ளும். ஆனால் இந்த புலிக்குட்டி எட்டு மாதமாக இருக்கும்போதே வனத்துறை பராமரிப்பற்கு வந்துவிட்டதால் இதற்கு வேட்டையாட தெரியாது.
எனவே புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கும் விதமாக மானாம்பள்ளி அருகே உள்ள மந்திரிமடம் என்ற இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் 75 லட்ச ரூபாய் செலவில் கம்பி வேலி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூண்டில் வரும் 16ஆம் தேதி முதல் புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்படுகிறது புலிக்குட்டி எளிதாக வேட்டையாடி பழகும் வகையில் முதலில் முயல், காட்டுப் பன்றி போன்றவை விடப்பட்டு வேட்டையாட பழக்கபடுத்தப்படும்.
பின்னர் மான் போன்ற விலங்குகள் விடப்பட்டு வேட்டையாட பழக்கப்படுத்தபடும். புலிக்குட்டி அதன் தேவைக்கு வேட்டையாடி சாப்பிடும் அளவிற்கு பயிற்சி பெற்றபின் அதன் உடல்நிலை, வேட்டையாடும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கூண்டில் இருபத்தி நான்கு மணி நேரமும் புலிக்குட்டியின் நடவடிக்கைகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Also read... அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு - பயிற்சி செவிலியர்கள் மீது குற்றச்சாட்டு!
தமிழகத்தில் முதல்முறையாக புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட இருப்பதும் அதற்காக 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூண்டு அமைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பிற பகுதிகளில் சிறுத்தை, புலி உள்ளிட்ட காட்டுயிர்கள் பாதிக்கும் போது அவற்றை மீட்டு பராமரிக்க இந்த கூண்டை தொடர்ந்து பயன்படுத்த தமிழக வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.