மேகதாது: மத்திய அரசின் செயல் தமிழகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கு- மு.க.ஸ்டாலின்

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது பலன் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழக நலன் கருதி தீர்மானத்தை ஆதரிக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 6:11 PM IST
மேகதாது: மத்திய அரசின் செயல் தமிழகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கு- மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Web Desk | news18
Updated: December 6, 2018, 6:11 PM IST
மேகதாது அணை குறித்த தீர்மானம் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிற தீர்மானமாக இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும் என்றும், தமிழக நலன் கருதி இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்திருக்கும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்காக இன்று (06-12-2018) நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பின்னர், மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்று ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தின் வாழ்வாதார உயிராதாரப் பிரச்னைக்காக இன்றைக்கு நாமெல்லாம் இங்கே பேரவையிலே கூடி அமர்ந்திருக்கிறோம். ஏற்கெனவே, கஜா புயல் டெல்டா மாவட்டங்களின் பூகோளத்தையே புரட்டிப் போட்டுவிட்டது.

அந்தப் புயல் ஏற்படுத்தியிருக்கும் பேரழிவினால் பல இலட்சம் விவசாயிகள், மீனவர்கள், சிறுவணிகர்கள் உள்ளிட்ட தமிழ்மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழந்து, இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற சோகம் சூழ்ந்து, எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறி பரவியிருக்கிறது.

சொந்த ஊரிலேயே மக்கள் அகதிகளாகி விட்ட அவலம் நேர்ந்திருக்கிறது. பட்ட காலிலேயே படும் என்பதைப்போல, ஏற்கனவே வாழ்க்கையை இழந்து வாடிக்கொண்டிருக்கும்   விவசாயிகள் மீது, "மேகதாது" என்று முதுகில் குத்தும் மூர்க்கத்தனமான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்திருப்பது கண்டு மனவேதனை கொள்ளாதார் யாருமில்லை.

"கஜா" புயல் வடு காய்வதற்கு முன்பு, விவசாயிகளின் அடிமடியில் கை வைக்கும் விதத்தில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது, குடிகெடுக்கும் கோடரிக் காம்பாகியிருக்கிறது. மேகதாது அணை கட்டுவது தொடர்பாக இதற்கு முன்பு இரு முறை நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். 05.12.2014 அன்றும், 27.03.2015 அன்றும் ஏகமனதாக இதே மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம்.
Loading...
தமிழகத்திலிருந்தும் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவினை - அல்லது அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரைச் சந்தித்து இதை தடுத்திருக்க வேண்டும். மேகதாது அணை கட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதியளிக்கக் கூடாது என்று கூறியிருக்க வேண்டும்.

ஆனால் கர்நாடக முதல்வர் சந்தித்து ஒரு மாதம் கழித்து - தாமதமாக அதாவது 08.10.2018 அன்றுதான் பிரதமரிடம் மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று கடிதம் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர். அதற்கு முன்பும் கடிதங்கள் எழுதியிருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை.

"காவிரி நதி தேசிய சொத்து. அதை கர்நாடக மாநிலம் உரிமை கொண்டாட முடியாது" என்று நெற்றியடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏன் "தமிழ்நாட்டிற்கு நடுவர் மன்றம் அளித்துள்ள உரிமையை பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த வகையிலும் காவிரிக்கு சொந்தம் கொண்டாட முடியாது" என்று அறுதியிட்டு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

"நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவது குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இருக்கிறது" என்று உச்சநீதிமன்றம் உருவாக்கிய "ஸ்கீம்" சொல்கிறது. ஆனாலும் தமிழகத்தின் மெகா குடிநீர் திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக, தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்கு அச்சுறுத்தலாக, தமிழக விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக, அவர்களை நிர்கதியில் விட, கர்நாடக மாநில அரசு மேகதாது அணையை கட்ட திட்டமிடுகிறது.

அதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கிறது என்றால் - இது கூட்டாட்சிக்கு விரோதமான போக்கு. மத்திய - மாநில உறவுகளுக்கு எதிரான போக்கு, ஏன் தமிழகத்தின் உணர்வுகளை - இந்த மன்றத்தின் உணர்வுகளை அவமதிக்கும் போக்கு மட்டுமல்ல - உச்சநீதிமன்றத்தையே கேள்வி கேட்கும் மனப்பான்மையுடன் மத்திய அரசும் செயல்படுகிறது - கர்நாடக அரசும் செயல்படுகிறது.

இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது பலன் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிற தீர்மானமாக இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும். இருந்தாலும் தமிழக நலன் கருதி இந்தத் தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரிக்கிறேன்.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. மத்திய அரசும் பேரிடர் நிதியை இன்னும் தரவில்லை. எனவே, கஜா புயல் நிவாரணப் பணிகள் பற்றி விவாதிப்பதற்கு நாளை வரை சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Also watch
First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்