ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கால்பந்து வீராங்கனை மரண விவகாரத்தில் காவல்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

கால்பந்து வீராங்கனை மரண விவகாரத்தில் காவல்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

கால்பந்து வீரங்கனை பிரியா

கால்பந்து வீரங்கனை பிரியா

கால்பந்து வீராங்கனை மரண விவகாரத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவில் இருந்து அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்துதல் என்ற பிரிவிற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கால் சவ்வு பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி பிரியாவுக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து கால் அகற்றப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நவம்பர் 15ம் தேதி சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி பிரியாவின் மரணத்திற்கு தவறான சிகிச்சையே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

  மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதையடுத்து, பெரம்பூர், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை எலும்பு முறிவு துறை மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  மாணவி உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒரு மருத்துவக் குழுவை நியமித்து உத்தரவிட்டது.

  முழுமையான விசாரணைக்குப் பின், மாணவி மரணம் தொடர்பான மருத்துவக் குழுவின் அறிக்கை காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் மருத்துவர்களின் கவனக்குறைவே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது .பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம், மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே கவனக்குறைவாக செயல்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

  மருத்துவக் குழுவின் அறிக்கையை அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என போடப்பட்டிருந்த வழக்கு மாற்றப்பட்டு, 304 A பிரிவின் கீழ் அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்னும் பிரிவில் வழக்கு பதியப்பட்டது. சட்ட வல்லுநர்களிடம் முறையான ஆலோசனை பெற்று மருத்துவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதையும் படிங்க: சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : திங்கள், செவ்வாய் கிழமைகளில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை!

  இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவர்கள் தரப்பு வழக்கறிஞர், பல அறுவை சிகிச்சைகளை இருவரும் வெற்றிகரமாக செய்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

  தற்போது விசாரணை என்ற பெயரில் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து துன்புறுத்துவதாகவும், சரணடைய தயாராக இருப்பதாகவும், சாட்சிகளை கலைக்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவர்கள் குழு அளித்த அறிக்கையில், மனுதாரர்கள் கவனக்குறைவாக செயல்பட்டது உறுதிபடுத்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

  இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி மருத்துவர்களின் முன்ஜாமின் கோரிக்கையை நிராகரித்தார். முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டு மருத்துவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை.தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மருத்துவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

  மருத்துவர்களை சரணடையுமாறு குறிப்பிட்ட நீதிபதி, அவர்களது குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது என்றும் இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார். முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டு மருத்துவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை.தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மருத்துவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Tamilnadu