சென்னையில் மிகவும் பிரபலமான கோவில்களுள் ஒன்று வடபழனி முருகன் கோவில். நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடும் வழிபாட்டுத்தமாக இது விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக ஸ்ரீனிவாசன் என்பவர் பிரசாதங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். கோவிலுக்குள் இருக்கும் ஒரே பிரசாத கடை ஸ்ரீனிவாசனுடையது என்பதால் கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் ஸ்ரீனிவாசனின் கடையில்தான் பிரசாதம் வாங்கிச் செல்வர்.
இந்த நிலையில் இவரது கடையில் தரமற்ற பொருட்களை பிரசாதமாக வழங்கி வருவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உணவு பாதுகாப்புத் துறைக்கு வந்துள்ளன. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இவரது கடைக்கு சென்று சோதனை நடத்தியபோது, பல ஆண்டுகளாக கோவிலுக்குள் பிரசாத கடை நடத்துவதற்கான உரிமை இல்லாமல் ஸ்ரீனிவாசன் பிரசாத கடை நடத்தி வந்தது தெரியவந்தது.

வடபழனி முருகன் கோயிலில் சோதனை
மேலும், அதிகாரிகளின் சோதனையில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக கடை நடத்துவதற்கான லைசென்ஸ் மற்றும் தரமான பொருட்கள் விநியோகம் செய்யாததற்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீனிவாசனுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் தரமற்ற பிரசாதங்களை ஸ்ரீனிவாசன் விநியோகித்து வருகிறார் என்ற அடுக்கடுக்கான புகார்கள் வர உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று காலை 9 மணி அளவில் வடபழனி முருகன் கோவில் உள்ளே இருக்கும் ஸ்ரீனிவாசன் என்பவரது கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!
சோதனையில் ஸ்ரீனிவாசன், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரமற்ற லட்டு, அதிரசம், தட்டு வடை, முறுக்கு, பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதங்களை வழங்கி வந்தது தெரியவந்தது. மேலும், வடபழனி சாஸ்திரி நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு வடபழனி முருகன் கோவிலின் போலியான பெயரில், ஸ்ரீனிவாசன் கோவில் பிரசாதங்களை தயார் செய்து வந்ததும் தெரியவந்தது.

வடபழனி முருகன் கோயிலில் சோதனை
அங்கு சென்ற அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கு தரமற்ற பொருட்களை கொண்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பிலான லட்டு, பஞ்சாமிர்தம், அதிரசம், தட்டு வடை, முறுக்கு போன்ற கோவில் பிரசாதங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் சீனிவாசனின் பிரசாத கடை மற்றும் பிரசாதங்கள் தயாரிக்கும் இடம் ஆகியவற்றிற்கு சீல் வைத்தனர்.
சென்னையின் மிகப் பிரபலமான வழிபாட்டுத் தலமான வடபழனி முருகன் கோவிலில் 20 ஆண்டுகளாக பிரசாத கடை நடத்தி வரும் ஸ்ரீனிவாசன் என்பவர் எவ்வளவு ஆண்டுகளாக தரமற்ற பொருட்களை பக்தர்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார் என்பது குறித்தும் பல ஆண்டுகளாக லைசென்ஸ் இல்லாமல் எப்படி கோவில் வளாகத்தில் ஸ்ரீனிவாசன் பிரசாத கடை நடத்தி வந்தார் என்பது குறித்தும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.