10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்ற ஜொமேட்டோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்நிறுவனத்துடன் ஆலோசனை நடத்த
சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பத்து நிமிடங்களுக்குள் உணவு டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அண்மையில் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது. பத்து நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற உத்தரவாதம் நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் டெலிவரி செய்யும் நபருக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதன்மூலம் சாலையில் வாகனத்தை வேகமாக இயக்கி விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், டெலிவரி ஊழியருக்கு மட்டுமல்லாது சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்து நேரலாம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறையிடம் கேட்டபோது, இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டால் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அந்நிறுவனத்திற்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் தனியாக சைக்கிளில் சென்று ஆய்வு செய்த பெண் ஐபிஎஸ் ரம்யா பாரதி
மேலும் சென்னையிலுள்ள ஜொமேட்டோ நிர்வாக அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டறிவதற்கு விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர். ஜொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு விவாதப் பொருளாக உருவெடுத்த நிலையில், அந்நிறுவன உரிமையாளர் தீபிந்தர் கோயல் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, பிரியாணி, மோமோ, ஆம்லெட் உள்ளிட்ட குறிப்பிட்ட சில உணவுக்கள் மட்டுமே 10 நிமிடத்தில் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார். சரியான நேரத்தில் டெலிவரி செய்யவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படாது என்றும் சரியான நேரத்தில் டெலிவரி செய்தால் ஊக்கதொகையும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.