உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்... பள்ளியில் போட்ட தடுப்பூசி காரணமா?

  • News18
  • Last Updated :
  • Share this:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பள்ளியில் தடுப்பூசி போடப்பட்டதால், உயிருக்கு போராடும் 5 வயது சிறுவனை காப்பாற்றுமாறு, பெற்றோர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சத்யகுமார் - தனம் தம்பதிக்கு பவனி சங்கர் என்ற 5 வயது மகன் உள்ளார். பவனி சங்கர் பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மூச்சிரைப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பவனி சங்கருக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பள்ளியில் இருந்தபோது, தொண்டைப் பகுதி வீங்கியதால் தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், பவனி சங்கருக்கு உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடியும், கால்கள் துவண்டு போய் நடக்க முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர், புதுவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவித பயனும் இல்லை என பெற்றோர் குமுறுகின்றனர்.

தற்போது, பெங்களூரில் உள்ள நிமான்ஸ் என்னும் மூளை நரம்பு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பவனி சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லட்ச கணக்கில் செலவு செய்து வருவதாகவும், பள்ளியின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டும் பவனி சங்கரின் பெற்றோர். உரிய நடவடிக்கை மேற்கொண்டு உயிருக்கு போராடும் தனது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வனிடம் மனு அளித்தனர்.

உயிருக்கு போராடும் பவனி சங்கருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு யார் காரணம் என அரசு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே, சிறுவன் பாதிக்கப்பட்டது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், தடுப்பூசியால் பாதிக்கப்பட்டது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உறுதியளித்துள்ளார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: