ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனாவால் சுனாமியை விட மோசமான பாதிப்பு... மீனவர்கள் இப்படி சொல்ல காரணம் என்ன...?

கொரோனாவால் சுனாமியை விட மோசமான பாதிப்பு... மீனவர்கள் இப்படி சொல்ல காரணம் என்ன...?

தென்னிந்திய மீனவர் சங்க தலைவர் பாரதி, மீன் வியாபாரி தீபா மற்றும் கல்யாணி. (photo courtesy - Nirmalraj)

தென்னிந்திய மீனவர் சங்க தலைவர் பாரதி, மீன் வியாபாரி தீபா மற்றும் கல்யாணி. (photo courtesy - Nirmalraj)

ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன் பிடி தடை காலம் வரும். இப்போது அதற்கு முன்னதாக கூடுதலாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்காவிட்டால் பிழைப்பு நடத்துவது சிரமம் என்ற நிலையில் உள்ள மீனவர்கள், இப்போது 21 நாட்கள் ஊரடங்கு சுனாமியியை விட பேரிழப்பாக உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை நொச்சிக் குப்பம் பகுதியில் கிட்டத்தட்ட 3000-த்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இதில் 2000 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேரடியாக மீன் சார்ந்த தொழில்களையும், மற்றவர்கள் கடற்கரையில் சிறு கடைகள், ஆட்டோ ஓட்டுதல், தூய்மை பணிகள் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர்.

கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை முதல்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் முடங்கியுள்ள பல்வேறு தொழில்களை போலவே மீன் பிடி தொழிலும் கடுமையாக முடங்கியுள்ளது.

சென்னையில் பரபரப்பான மீன் விற்பனைக்கு பெயர் போன இடங்களில் ஒன்றான நோச்சிக் குப்பம் மீன் மார்க்கெட்டில், இப்போது சில காகங்கள் மட்டும் இரை தேடி பறந்து கொண்டிருந்தன. தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் ஆண்கள் கரையில் நிற்கும் படகில் அமர்ந்து கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிகாலை முதல் மதியம் வரை மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் இப்போது, ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

(image: Nirmalraj)

நம்மிடம் பேசிய மீன் வியாபாரி கல்யாணி, அரசு அளித்த 1000 ரூபாய் நிவாரணம் ஒரு குடும்பத்துக்கு மூன்று நாட்களுக்கு கூட போதாது என்றும், தினமும் கடலுக்கு சென்றால் தான் எங்களால் பிழைப்பே நடத்த முடியும். வட்டிக்கு வாங்குவதற்கு கூட இப்போது வழி இல்லை என்றார். மேலும், வீட்டிலேயே இருப்பது மன அழுத்தமாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கடற்கரையில் பஜ்ஜி கடை வைத்துள்ள தீபா பேசுகையில்,"என் கணவர் மீன் பிடிக்க கடலுக்கு செல்கிறார், நான் கடற்கரையில் கடை வைத்துள்ளேன்.கடலுக்கு செல்வதன் மூலம் படகு வைத்திருப்பவர், மீன் பிடிப்பவர், மீன் விற்பவர், மீனை கொண்டு செல்பவர், சிறு வியாபாரிகள் என பலருக்கும் தினமும் வருமானம் கிடைக்கும். இப்போது பல தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்" என்றார்.

மேலும்,சரியான திட்டமிடல், நிவாரணம் இல்லாததால் ஒரு தீவில் இருப்பதை போல உணர்கிறோம் என்று தெரிவித்தவர், 2004 ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பின் போது நிவாரண தொகையாக 2000 ரூபாய் கொடுத்த அரசு இப்போது, 1000 ரூபாய் கொடுக்கிறது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு கொடுமையாக இருக்கிறது.

இதில், ஊரடங்கு மேலும் நீட்டிகப்பட உள்ளது. எங்களுடைய உணவிற்கு வழி இருக்காது. நோயில் இறப்பதை விட பசியில் இறப்பது மிக கொடுமையானது என்று கண்கலங்க தெரிவித்தார்.

"நாங்கள் மீன் கடை வைத்தால் பறவைகள், நாய்கள் என அனைத்துக்கும் கிடைக்கும் உணவு 20 நாட்களுக்கும் மேலாக அவைகளுக்கு கிடைக்கவில்லை. அவைகளும் பசியும் பட்டினியுமாக இருப்பதாக" கவலை தெரிவித்தார்.

கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகில் நண்பர்களுடன் அமர்ந்திருந்த மீனவர் குமார் பேசுகையில், மீன் பிடிப்பதை தவிர வேறு தொழில் எனக்கு தெரியாது. மீன் விற்பனை செய்யும் இடத்தில் தேவையான சமூக இடைவெளி, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றினாலும் எங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றார்.

இந்தியாவில் உள்ள 13 கடலோர மாநில மீனவர்களை பற்றி இந்திய அரசு சிந்திக்கவே இல்லை. ஊரடங்கு அமல் படுத்துவதற்கு முன்னர் மீனவர்களுக்கு உரிய தேவைகளை அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். காய்கறிகளை, மளிகை பொருட்களை விற்க அனுமதி இருக்கும் போது, மீன் விற்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார் தென்னிந்திய மீனவர் சங்க தலைவர் பாரதி.

மேலும், இனி நீட்டிப்பு செய்யவுள்ள ஊரடங்கு காலத்தில் சரியான திட்டமிடுதலை அரசு செய்ய வேண்டும்.விவசாய பொருட்களுக்கு விலக்கு அளித்துள்ளது போல, மீன் சார்ந்த பணிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர், ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன் பிடி தடை காலம் வரும்.

இப்போது அதற்கு முன்னதாக கூடுதலாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக இயல்பாகவே இந்த மூன்று மாதங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகும் மீனவர்கள், இப்போது மேலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத்துடன், ஊரடங்கு தடைக்காலத்தையும் கருத்தில் கொண்டு கூடுதல் நிவாரண நிதி அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே மீனவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக எழுந்துள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lockdown