HOME»NEWS»TAMIL-NADU»fishermen tortured and killed by the sri lankan navy vjr

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துன்புறுத்தி படுகொலை - உறவினர்கள் குற்றச்சாட்டு

மீனவர்களின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தனித்தனி வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் துன்புறுத்தி படுகொலை - உறவினர்கள் குற்றச்சாட்டு
கோப்புப்படம்
  • Share this:

இலங்கை கடற்படையினரால் ராமநாதபுரம் மீனவர்கள் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், நெடுந்தீவு அருகே கடந்த 18ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் படகை நீரில் மூழ்கடித்ததாக கூறப்படுகிறது. இதில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இதற்கு தமிழக மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 பேரின் உடல்களும் வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து நான்கு பேரின் உடல்களும் கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்டு இந்திய கடற்படையினரிடம் நடுக்கடலில் ஒப்படைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணியளவில் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்ட மீனவர்களின் உடல்கள் துறைமுகத்தில் சிறிது நேரம் அஞ்சலிக்கு வைக்கப்பட்டன. அங்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, மீன் வளத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.



பின்னர், மீனவர்களின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தனித்தனி வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழாதவண்ணம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினார்.

 

கடலில் மீன் பிடிக்க சென்ற இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் அடித்து, துன்புறுத்தி படுகொலை செய்து விட்டதாக இறந்த மீனவர் செந்தில்குமாரின் சகோதரர் முருகேசன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக புதுக்கோட்டை மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

மீனவர்கள் உயிரிழந்ததற்கு காரணமானவர்களை, தண்டிக்கும் வரை ஓயமாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 பேரில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மேசியாவின் உடல் அந்தோணியார் புரம் மைதானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 
Published by:Vijay R
First published: