தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும், அவர்களின் விசை படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து வருகிறது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது, ''வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
இதையும் படிங்க: 3வது பெரிய கட்சியா? பல இடங்களில் டெபாசிட்டே காலி.. பாஜக மீது திருமாவளவன் விமர்சனம்
பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 80 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. இந்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டும் கூட தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.
சிங்களக் கடற்படையினரால் இப்போது கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 59 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.