• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கருவாட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்... காரணம் என்ன?

கருவாட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்... காரணம் என்ன?

மாசி கருவாடு

மாசி கருவாடு

கடலுக்கு சென்றால் பெரிய அளவில் மீனும் இல்லை. கிடைத்த மீனை கருவாடாக்கினால் கொள்வாரும் இல்லை என்று தூத்துக்குடி மீனவர்கள் கருவாட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் முக்கியமானதாக உள்ளதால் இதன் சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களும் சிறப்பாக நடக்கின்றன. அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், வருவாய்க்காகவும் தயாரிக்கப்படும் மாசிக் கருவாடு தொழிலில் இப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மன்னார் வளைகுடாவில் கிடைக்கும் சூரை மீன் இத்தொழிலுக்கு முக்கிய பொருளாக உள்ளது.

இங்கு பிடிக்கப்படும் சூரை மீன்கள் கழுவி சுத்தம் செய்யப்பட்டு அதனுள் இருக்கும் குடல் உள்ளிட்டவை அகற்றப்படுகிறது. பின்னர் அவற்றை நன்றாக அவித்து தண்ணீரை இறுத்து ( நீக்கி) ஒரு வாரம் முதல் 10 நாள் வரை வெயிலில் உலர்த்தப்படுகிறது. மீன்கள் பாறை போல் கடினத்தன்மைக்கு மாறும் வரை காய வைக்கப்பட்டு மாசிக்கருவாடு தயாரிக்கப்படுகிறது.

அதன் பிறகு பேக்கிங் செய்தோ, டின்களில் அடைத்தோ ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சூரை மீன்பிடித்தொழில் நசிந்து வருவதால் மாசிக்கருவாடு உற்பத்தியும் நலிவை சந்தித்து வருகிறது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மாசி கருவாடு தற்போது பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது.



இங்கு தயாரிக்கப்படும் மாசி ஒரு கிலோவுக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாசி கருவாட்டுக்கு இலங்கை, மாலத்தீவு, இலட்சத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் தற்போது மாசி கருவாடு கிலோ ரூ 1500 வரை விலை அதிகரித்து உள்ளது. ஆனால் ஏற்றுமதி செய்யமுடியவில்லை என்று மீனவர்கள் தவித்து வருகின்றனர்.



இது குறித்து மாசி கருவாடு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள ஞானராஜ் என்பவர் கூறுகையில், ”சூரை மீன் குறைவு, இலங்கை கடற்படை அச்சுறுத்தல், கன மழை பாதிப்பு  உள்ளிட்ட காரணங்களினால் மாசி உற்பத்திக்கு இலங்கை தடை செய்துள்ளது. இதன் காரணமாக ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கருவாடு தொழில் பெரும் நலிவை சந்தித்து வருகிறது” என்று கூறுகிறார்.

மேலும் படிக்க... காதல் விவகாரம்: வங்கி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

மேலும் இலங்கையில் பெருமளவு மாசி கருவாடு உபயோகிப்பாளர்கள் உள்ளனர். ஆனால் தற்போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய தடை உள்ளதால் சுமார் 100 கோடி அளவிலான மாசி கருவாடு தனியார் குளிர்பதன கிட்டங்கியில் தேங்கி உள்ளது. இதனால் தவிக்கும் மீனவர்கள் இதற்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: