மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அளித்த கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் கடந்த சில வருடங்களாகவே யாருக்கு அதிகாரம் என்பதில் போட்டி நிலவிவருகிறது. இந்தநிலையில், அதிகாரப் போட்டியின் உச்சமாக, நேற்று முதல் ஆளுநர் மாளிகையைக் கருப்புச் சட்டை அணிந்து முற்றுகையிட்ட நாராயணசாமி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகை போராட்டக் களத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு வஞ்சர மீன், இறால் வறுவல் பரிமாறப்பட்டது. ஆளுநருக்கு எதிராக தொடர்ந்து 3-வது நாளாகப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி மீனவர் அணி பொறுப்பாளர் மீன் மற்றும் இறால் வறுத்துக் கொண்டு வந்து அனைவருக்கும் அளித்துள்ளார்.
‘ஆளுநர் கிரண்பேடி, வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போடுகிறார். மக்கள் நலத்திட்டங்கள் குறித்த கோப்புகளை அனுப்பினால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புகிறார். அவர், சர்வாதிகாரி போல செயல்படுகிறார். இலவச அரிசித் திட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார். அரசு ஊழியர்கள், கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் தொடர்பான கோப்புகளைத் திருப்பி அனுப்புகிறார்.
கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டிய நிதி ஒப்புதலை தடுத்து நிறுத்தியுள்ளார். இலவசத் திட்டங்கள் குறித்த கோப்புகளை நிறுத்துகிறார். அதிகாரம் இல்லாத அலுவலகங்களுக்குச் சென்று ஆய்வு நடத்துகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறார்.
39 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டிய விவகாரம் தொடர்பாகப் பிப்ரவரி 7-ம் தேதி கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கோப்புகளுக்கு இதுவரையில் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்தக் கடிதத்துக்கு இதுவரையில் பதிலும் அளிக்கவில்லை. அந்தக் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும்வரையில் போராட்டம் தொடரும்’ என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை அருகிலேயே சமைத்து சாப்பிட்டுப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
நேற்று, இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்துள்ளது. இந்தநிலையில், ஆளுநர் கிரண்பேடி நேற்று காலையில் திடீரென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kiran bedi, Narayana samy, Puducherry Lok Sabha Elections 2019, Puthucherry