கிரிக்கெட் போட்டியின் முதல் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி, ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, புகழ் பெற்ற அப்துல் ஜப்பார் உடல் நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 81.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பாரின் வானொலி வர்ணனையால் ஏராளமானோர் ஈர்க்கப்பட்டனர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர், தமிழ்நாடு-கேரளா ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி போட்டிக்கு வானொலியில் முதல் வர்ணனை செய்தார். 80-களில் அவரின் வர்ணனை புகழ்பெற்று திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து தொலைகாட்சிகளிலும் வர்ணனையாளராகப் பணியாற்றினார்.
‘அழைத்தார் பிரபாகரன்’ என்ற தலைப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததைப் பற்றி, அவர் எழுதிய நூல் வாசர்களால் விரும்பிப் படிக்கப்படும் நூலாக இருந்து வருகின்றது. இந்நிலையில், அப்துல் ஜப்பாரின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அப்துல் ஜப்பாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “வானொலியில் விளையாட்டு வர்ணனைகளுக்குப் புதிய அழகியலைச் சேர்த்தவரும், உலகத் தமிழரிடையே அன்றாடம் அழகிய தமிழ் பேசிய ஒலிபரப்பாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைந்தார். அஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.