வேலூரில் பட்டாசு கடையில் தீ விபத்து.. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு..

Youtube Video

வேலூர் அருகே பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 பேரக் குழந்தைகளும், தாத்தாவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 • Share this:
  வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் அருகே மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை செயல்பட்டு வந்தது. அந்தக் கடைக்கு வந்த இருவர் பட்டாசுகளை வாங்கும் முன்பு அதன் தரத்தை சோதிக்க, அவற்றை வெடித்துப் பார்க்க வேண்டுமென கூறியுள்ளனர். இதையடுத்து மோகனும் சில பட்டாசுகளை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், அவர்கள் கடைக்கு எதிரிலேயே அவற்றை வெடித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசில் இருந்து சிதறிய தீப்பொறி மோகனின் கடைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடையின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.

  மோகன் சுதாரிப்பதற்குள் தீ மளமளவென பரவியதுடன், கொளுந்து விட்டு எரிந்தது. இதனால், கடைக்குள் இருந்த தனது 2 பேரக் குழந்தைகளுடன், மோகனும் மாட்டிக் கொண்டார். பக்கத்து கடைக்காரர்கள் வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் கோரத்தாண்டவத்தின் முன்னால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி தீயணைப்பு துறையினர், பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடினார்கள். கடைக்கு உள்ளே சிக்கிய மூவரையும் மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். எனினும், தீயின் கோரப் பிடியில் சிக்கி மோகன் மற்றும் அவரது பேரன்களான தனுஜ் மற்றும் தேஜஸ் ஆகிய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர்.

  நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் உயிரிழந்த மூவரின் சடலங்களையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்பிடித்த பட்டாசுக் கடைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

  மேலும் படிக்க...ஹைதராபாத் அருகே கார்-லாரி மோதி விபத்து... 6 பேர் உயிரிழப்பு

  கோடை விடுமுறையை கொண்டாட தாத்தாவின் வீட்டிற்கு வந்த பேரக் குழந்தைகள், பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  இதனிடையே, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளையும் ஞாயிறன்று மூட வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் பட்டாசு கடைக்கு தொடர்பில்லாத நபர்களை, கடைக்குள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டாசு கடைக்கான உரிமம் வைத்திருப்பவர்கள் ஜூலை 30ம் தேதி வரை புதிதாக பட்டாசுகள் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: